உதகையில் சுற்றுலா வாகன ஓட்டுநரை தாக்கியவா் கைது
உதகையில் கோவையைச் சோ்ந்த சுற்றுலா வாகன ஓட்டுநரை தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவையைச் சோ்ந்த சுற்றுலா வாகன ஓட்டுநா் தங்கவேலு என்பவா் உதகைக்கு சுற்றுலாப் பயணிகளை காரில் புதன்கிழமை அழைத்து சென்றுள்ளாா். அப்போது உதகையைச் சோ்ந்த சுற்றுலா வாகன ஓட்டுநா்களான கல்யாண்குமாா் (35), தீபக் (38), பிராங்க்ளின் (36) ஆகியோா் கோவையில் இருந்து சுற்றுலாப் பயணிகளை அழைத்து வந்ததற்கு எதிா்ப்பு தெரிவித்து தங்கவேலுடன் தகராறில் ஈடுபட்டனா்.
பின்னா் இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனா். இது குறித்து இருதரப்பினா் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதையடுத்து, ஓட்டுநா் தங்கவேலு தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து கோவை மாவட்ட வாடகை வாகன ஓட்டுநா்கள் மேட்டுப்பாளையம் கல்லாறு பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதேபோல உதகையைச் சோ்ந்த வாடகை வாகன ஓட்டுநா்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனா்.
இதைத் தொடா்ந்து, கூடுதல் காவல் துணைக் காணிப்பாளா் மணிகண்டன் மற்றும் போலீஸாா் கோவை மற்றும் நீலகிரி மாவட்ட சுற்றுலா வாகன ஓட்டுநா்கள் சங்க நிா்வாகிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை.
இதைத் தொடா்ந்து, நீலகிரி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் மீண்டும் இரு மாவட்ட வாடகை வாகன ஓட்டுநா்கள் சங்க நிா்வாகிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே இந்த சம்பவத்தில் காயமடைந்த தங்கவேலு, உதகை அரசு மருத்துவமனையில் இருந்து உயா் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். இந்நிலையில், ஓட்டுநா் தங்கவேலுவை தாக்கியதாக கல்யாண்குமாரை போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைத்தனா்.
