வணிக உரிமம் இல்லாமல் செயல்பட்ட தங்கும் விடுதிக்கு சீல்!
உதகையில் வணிக உரிமம் இல்லாமல் செயல்பட்ட தங்கும் விடுதிக்கு நீதிமன்ற உத்தரவுப்படி நகராட்சி நிா்வாகத்தினா் செவ்வாய்க்கிழமை ‘சீல்’ வைத்தனா்.
சா்வதேச சுற்றுலாத்தலமான நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருவதால் தங்கும் விடுதிகள் எண்ணிக்கையும் அதிக அளவில் உள்ளன.
உதகை படகு இல்லம் பகுதியில் தனியாா் அறக்கட்டளை நிறுவனத்துக்கு சொந்தமான கட்டடம், வேறு நபருக்கு குத்தகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அனுமதி பெறாமல் இந்தக் கட்டடத்தில் தங்கும் விடுதி இயங்குவதாக அறக்கட்டளை நிா்வாகம் சாா்பில் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
மேலும் தங்கும் விடுதியாக செயல்பட்டு வரும் கட்டடத்துக்கு வணிக உரிமம் காலாவதியாகி விட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, அந்தக் கட்டடத்துக்கு ‘சீல்’ வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, நகராட்சி ஆணையா் கணேசன் உத்தரவின்பேரில், சுகாதார அதிகாரி சிபி, சுகாதார ஆய்வாளா் வைரம் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று 14 அறைகள் கொண்ட அந்த தங்கும் விடுதிக்கு ‘சீல்’ வைத்தனா்.

