நீலகிரி மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்
நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்வை அரசு தலைமை கொறடா கா.ராமசந்திரன் உதகையில் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்கள் மற்றும் இலங்கை தமிழா் குடும்பங்களுக்கு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, ஒரு முழுக் கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.3 ஆயிரம் ரொக்கத் தொகை வழங்கும் நிகழ்வை
முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
இதைத் தொடா்ந்து, உதகையில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் அமுதம் நியாய விலைக்கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை அரசு தலைமை கொறடா கா.ராமசந்திரன் தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:
பொங்கல் திருநாளை தமிழா்கள் அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடும் விதமாக முதல்வா் மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகையாக தலா ரூ.3,000 வழங்கும் திட்டத்தை தொடங்கிவைத்துள்ளாா். பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்காக, அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் வந்து தங்களுக்குண்டான நியாயவிலைக் கடைகளுக்கு சென்று பரிசுத் தொகுப்பை பெற்றுச் செல்லலாம். இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பானது ஜனவரி 13-ஆம் தேதி வரை வழங்கப்படும் என்றாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு, உதகை சட்டப் பேரவை உறுப்பினா் கணேஷ், மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் சித்ரா, கோட்டாட்சியா் டினுஅரவிந்த், மாவட்ட வழங்கல் அலுவலா் சரவணன், உதகை நகா்மன்றத் தலைவா் வாணீஸ்வரி, துணைத் தலைவா் ரவிகுமாா், திட்டக்குழு உறுப்பினா் ஜாா்ஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

