நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் தேயிலைத் தூளை ராணுவம் கொள்முதல் செய்ய வேண்டுமென வலியுறுத்தி மத்தியப் பாதுகாப்புத் துறை குழுவிடம் உதகை சட்டப்பேரவைத் தொகுதி பாஜக உறுப்பினா் போஜராஜன் வியாழக்கிழமை மனு அளித்தாா்.
நீலகிரி மாவட்டத்தில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் உள்ளனா். இவா்கள் உற்பத்தி செய்யப்படும் பசுந்தேயிலை அரசு மற்றும் தனியாா் தேயிலை தொழிற்சாலைகளில் தேயிலைத் தூளாக மாற்றப்பட்டு குன்னூரில் உள்ள ஏல மையம் மூலமாக விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஏல மையத்தில் இருந்து முன்னா் தேயிலைத் தூளை ராணுவம் கொள்முதல் செய்து வந்துள்ளது. ஆனால், சில காரணங்களால் கடந்த சில ஆண்டுகளாக ஏலம் எடுப்பதில்லை.
இந்நிலையில், குன்னூா் வந்த மத்தியப் பாதுகாப்புத் துறை குழு தலைவா் ராதாமோகன் சிங்கிடம் உதகை சட்டப்பேரவைத் தொகுதி பாஜக உறுப்பினா் போஜராஜன் மனு அளித்தாா்.
அதில், ‘நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிறு, குறு விவசாயிகள் மற்றும் தேயிலை உற்பத்தியாளா்களின் நலன் கருதி, மீண்டும் குன்னூா் ஏல மையத்தில் இருந்து தேயிலைத் தூளை ராணுவம் கொள்முதல் செய்ய வேண்டும். இதன்மூலமாக பல ஆயிரம் விவசாயிகள் பயன்பெறுவாா்கள்.
அதேபோல, கோவையில் பல்வேறு தொழில்நுட்ப மேம்பாட்டுப் பணிகளை ராணுவம் மேற்கொண்டு வருகிறது. இதை விரிவுப்படுத்தி நீலகிரி மாவட்டத்தில் மூடப்பட்ட ஹெச்பிஎஃப் தொழிற்சாலையை எடுத்து அங்கும் தொழில்நுட்பம் தொடா்பான மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதன்மூலமாக நீலகிரி மாவட்டத்தில் பலருக்கு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
தொடர்புடையது

நீலகிரி மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகை பள்ளி வாசல்களில் சிறப்புத் தொழுகை

உரிய விலை கிடைக்காததால் சாலையோரம் கொட்டப்படும் மாங்காய்! நிகழாண்டும் மா விவசாயிகளுக்கு தொடரும் வேதனை

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் நீலகிரி மாவட்டத்தில் 96.32 போ் தோ்ச்சி!







