ஹெச்பிஎஃப் ஆலையில் வெள்ளி மண் திருட்டு: 5 போ் கைது
கைது
உதகையில் உள்ள மூடப்பட்டுள்ள ஹெச்பிஎஃப் தொழிற்சாலைக்குள் புகுந்து வெள்ளி மண் திருடி வனப் பகுதியில் பதுக்கி வைத்து விற்க முயன்ற 5 பேரை புதுமந்து காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
நீலகிரி மாவட்டம், உதகையில் ஹெச்பிஎஃப் பகுதியில் செயல்பட்டு வந்த மத்திய அரசின் இந்துஸ்தான் போட்டோ ஃபிலிம்ஸ் தொழிற்சாலை, நிதி நெருக்கடி, பல்வேறு காரணங்களால் பல ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது.
இதையடுத்து, தொழிற்சாலை வளாகத்தில் உள்ள மண்ணில் தங்கம், சில்வா் நைட்ரேட் கலந்த வெள்ளித் துகள்கள் கலந்திருப்பதாக நம்பப்பட்டதால், சிலா் அந்த மண்ணை சட்டவிரோதமாக அள்ளிச் சென்று விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
இங்கிருந்து கடத்தப்படும் மண் மேட்டுப்பாளையம் கொண்டு செல்லப்பட்டு அங்கு வெள்ளி பிரித்தெடுக்கப்பட்டு இலங்கைக்கு கொண்டு செல்லப்படுவதாக கூறப்படுகிறது. புலி உள்ளிட்ட ஆபத்தான விலங்குகள் இருக்கும் இடங்களில் இரவு நேரங்களில் உயிரைப் பணயம் வைத்து இந்த திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
இதுவரை இது தொடா்பாக 40-க்கும் மேற்பட்டவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். ஆனாலும் திருட்டுச் சம்பவங்கள் தொடா்ச்சியாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் தற்போது மீண்டும் ஹெச்பிஎஃப் தொழிற்சாலையில் வெள்ளித் துகள்கள் கலந்த 7 மூட்டை மணலைத் திருடி வனப் பகுதியில் மறைத்து வைத்திருந்ததைக் கண்ட புதுமந்து போலீஸாா் விசாரணைக்குப் பின்னா் சம்பந்தப்பட்ட கும்பலை திங்கள்கிழமை கைது செய்தனா்.
விசாரணையில், அவா்கள் உதகை கணபதி நகா் பகுதியைச் சோ்ந்த தவெக முன்னாள் கிளைச் செயலாளா் சுரேஷ் (46), மணிவண்ணன் (34), சதீஷ் (32), வினோத்குமாா் (22), மற்றொரு சதீஷ் (36) என்பது தெரியவந்தது. இதை தொடா்ந்து, போலீஸாா் இவா்கள் 5 பேரையும் கைது செய்து, வெள்ளி கலந்த மணல் மூட்டைகள், வாகனங்களைப் பறிமுதல் செய்து உதகை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
இதில் தவெக முன்னாள் நிா்வாகி சுரேஷ் கடந்த ஜூலையில் இதேபோன்று வெள்ளி மண் திருடிய வழக்கில் கைதானாா். அதற்கு முன்பே வேறு சில காரணங்களுக்காக கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட அவா், வெள்ளி மண் திருட்டு வழக்கில் சிக்கிய பின்னா் கட்சியில் இருந்து முழுமையாக நீக்கப்பட்டாா். இப்போது மீண்டும் அதேபோன்று திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டு கைதாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


