டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

நலிவடைந்து வரும் மண்பாண்டத் தொழில்

கார்த்திகைத் தீபத் திருநாளையொட்டி, அகல் விளக்குகள் விற்பனை தற்போது சூடுபிடித்துள்ளது. பண்டிகை கால விற்பனை ஒருபுறமிருக்க,

News image
Updated On :11 டிசம்பர் 2016, 12:10 am

பெ.ஸ்ரீனிவாசன்

கார்த்திகைத் தீபத் திருநாளையொட்டி, அகல் விளக்குகள் விற்பனை தற்போது சூடுபிடித்துள்ளது. பண்டிகை கால விற்பனை ஒருபுறமிருக்க, பரம்பரையாக மண்பாண்டங்கள் உற்பத்தி, விற்பனையில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்து வருகிறது.
கார்த்திகைத் தீபத் திருநாள் பண்டைய காலந்தொட்டு மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் சிவன் கோயில்களில் தீபம் ஏற்றி வழிபட்டால், அண்ணாமலையாரின் ஜோதி தரிசனம் கண்ட பலன் ஏற்படும் என்பது ஐதீகம்.
இந்நிலையில், வரும் திங்கள்கிழமை கார்த்திகைத் தீபத் திருநாள் கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகையை முன்னிட்டு அகல் விளக்குகளின் விற்பனை திருப்பூரில் தற்போது சூடுபிடித்துள்ளது. திருப்பூர் மாநகரில், அவிநாசி சாலை, தாராபுரம் சாலை, பல்லடம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் 80-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் சாலையோரங்களில் கடைகளை வைத்து, களிமண்ணால் செய்யப்பட்ட வண்ணமயமான அகல் விளக்குகளை பல்வேறு வடிவங்களில் விற்பனை செய்து வருகின்றனர். ரூ.1 முதல் அகல் விளக்குகள் விற்பனைக்குக் கிடைக்கின்றன.
இதில், பல்வேறு கலைநயமிக்க வேலைப்பாடுகள் கொண்டு அகல் விளக்குகள் ரூ. 150 வரை விற்பனை செய்யப்படுகின்றன. வேலைப்பாடுகளுடன் கூடிய அகல் விளக்குகளை அதிக விலை கொடுத்து வாங்குவதற்கும் பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். வீடுகளில் அகல் விளக்குகளை ஏற்றுவதற்காக பொதுமக்கள் வெள்ளிக்கிழமை முதலே இதை வாங்கிச் செல்கின்றனர்.
மண்பாண்டத் தொழிலாளர்களின் துயரம்... திருப்பூர் மாவட்டத்தைப் பொருத்தவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாரம்பரியமாக மண்பாண்டப் பொருள்கள் உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மாநகரில் சுமார் மண்பாண்டத் தொழிலில் ஈடுபட்டுள்ள 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஆனால், இவர்களில் சொற்ப எண்ணிக்கையினரே தற்போது இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். மற்றவர்களை திருப்பூர் பின்னலாடைத் தொழில் தன்னகத்தே இழுத்துக் கொண்டுவிட்டது.
இத்தொழில் நலிவடைந்து வருவதற்கு பல்வேறு காரணங்கள் தெரிவிக்கப்படுகின்றன. இதுகுறித்து மண்பாண்டத் தொழிலில் பரம்பரையாக ஈடுபட்டுள்ள திருப்பூர், தாராபுரம் சாலையைச் சேர்ந்த கந்தசாமி (55) கூறியதாவது:
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்புவரை திருப்பூர், அதன் சுற்றுப்பகுதிகளில் மண் எடுத்து மண்பாண்டங்கள் தயாரித்து வந்தோம். ஆனால், மண் எடுக்க கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவிப்பது, அதிகாரிகளிடம் அனுமதி கிடைப்பதில் இழுபறி போன்ற காரணங்களால் மண் கிடைக்காமல் பலரும் இத்தொழிலில் ஈடுபடுவதில்லை.
திருப்பூருக்கு அருகில் கோவை, கவுண்டம்பாளையத்தில் மட்டுமே மண்பாண்டங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆனால், அவர்கள், தாங்கள் உற்பத்தி செய்வதை தங்களது வியாபாரத்துக்கு மட்டுமே வைத்துக்கொள்கின்றனர்.
இதனால், தென் மாவட்டங்களில் இருந்து மண்பாண்டங்களை மொத்தமாக வாங்கி வந்து விற்பனை செய்து வருகிறோம்.
நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.70 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை பணம் கொடுத்து மண்பாண்டப் பொருள்களை வாங்கி இருப்பில் வைத்து விற்பனை செய்து வருகிறோம். இத்தொழிலில், ஒரு ரூபாய்க்கு 20 பைசா லாபம் கிடைக்கும். பொங்கல் மற்றும் கார்த்திகை தீப நாள்களில் மட்டுமே அதிக அளவில் விற்பனை நடைபெறும்.
தற்போது, இந்தத் தொழில் நலிவடைந்து வருகிறது. இத்தொழில் தெரிந்த பலரும் பின்னலாடைத் தொழிலுக்கு மாறிவிட்டனர். கடந்த 90 ஆண்டுகளாக ஒரே இடத்தில் எனது குடும்பத்தினர் மண்பாண்டப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்டு வருகிறோம்.
ஆனால், எனக்குப் பிறகு எனது மகன் இந்தத் தொழிலுக்கு வரமாட்டார் என்றார்.
நல வாரியத்தால் பயனில்லை... தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர் நல வாரியத்தின் உறுப்பினர் அட்டைகள் இருந்தும் உரிய நலத் திட்ட உதவிகள், ஊக்கச் சலுகைகள் சரியாக கிடைப்பதில்லை. களிமண்ணால் செய்யப்பட்ட பூந்தொட்டிகளுக்குப் பதிலாக சிமென்ட் தொட்டிகளை மக்கள் பயன்படுத்தத் தொடங்கி விட்டனர். நல வாரியம் இருந்தும் எந்தப் பயனுமில்லை என்பதே மண்பாண்டத் தொழிலாளர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
கலைநயமிக்க இத்தொழிலைப் பாதுகாக்க நல வாரியம் மூலமாக ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அரசின் கடமையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.