உணவுப் பொருள்களில் தரமின்மை இருந்தால் புகார் செய்யலாம்! கட்செவி அஞ்சல் எண்  அறிமுகம்

உணவுப் பொருள்களில் தரமின்மை, கலப்படம் இருப்பது தெரிய வந்தால்   94440 42322 என்ற கட்செவி அஞ்சல் எண்ணில் புகார் செய்யலாம் என்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தெரிவித்தார்.
Updated on
1 min read

உணவுப் பொருள்களில் தரமின்மை, கலப்படம் இருப்பது தெரிய வந்தால்   94440 42322 என்ற கட்செவி அஞ்சல் எண்ணில் புகார் செய்யலாம் என்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தெரிவித்தார்.
தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு, மருத்துவ நிர்வாகத் துறையின் வழிகாட்டுதல் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.  இதில்  தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி பேசியது: 
இறந்த கோழிகளை விற்பனை செய்யும் கோழிப்பண்ணை உரிமையாளர்கள்,  அவற்றை வாங்கி இறைச்சியாக விற்பனை செய்யும் வியாபாரிகள், அந்த வியாபாரிகளிடமிருந்து வாங்கி உணவுப் பொருளாகப் பயன்படுத்தும் தள்ளுவண்டிக் கடைக்காரர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள்.
சூடான உணவுப் பொருள்களை பாலிதீன் பைகளில் கட்டிக் கொடுப்பதையும், செய்தித்தாளைப் பயன்படுத்தி உணவுப் பொருள்கள் கொடுப்பதையும் முற்றிலும் நிறுத்த வேண்டும். 
உணவகங்கள், பேக்கரி நிறுவனங்களில் பணிபுரியும்  பணியாளர்கள் சுகாதாரமான முறையில் உணவுப் பொருளைக் கையாள்வது பற்றி அறிந்திருக்க வேண்டும். போலி தேயிலைத் தூளை விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை உணவுப் பாதுகாப்புத் துறையால் மேற்கொள்ளப்படும். 
பாதுகாப்பான குடிநீர் வழங்கும் தயாரிப்பு நிறுவனங்களின் தரத்தை மக்கள் எளிதாக அறிந்துகொள்ள, உணவுப் பாதுகாப்புத் துறை வாயிலாக புதிய வலைதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொது மக்கள் பாதுகாப்பான குடிநீர் பற்றி தெரிந்து கொள்ள, இணையதள முகவரியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.
முன்னதாக, உணவுப்பொருள் தரம் மற்றும் கலப்படம் குறித்து மக்கள் புகார் அளிப்பதற்காக கட்செவிஅஞ்சல் (வாட்ஸ்-அப்) எண் 94440 42322 அறிமுகம்  செய்யப்பட்டது.  அனைத்து உணவுப் பொருள் நிறுவனங்களிலும், புகார் எண்ணை மக்கள் பார்வைக்கு வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் கு.தமிழ்ச்செல்வன்,  அனைத்து அரசுத் துறை அலுவலர்கள், மாவட்ட உணவக உரிமையாளர் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் 
பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com