பாறைக்குழியில் குப்பை கொட்ட வந்த வாகனங்கள் சிறைபிடிப்பு: எம்எல்ஏவிடம் பொதுமக்கள் வாக்குவாதம்
திருமுருகன்பூண்டி பேரூராட்சி, அம்மாபாளையம் பாறைக்குழியில் குப்பைக் கொட்ட வந்த மாநகராட்சி வாகனங்களை பொதுமக்கள் சிறைபிடித்தனா்


திருமுருகன்பூண்டி பேரூராட்சி, அம்மாபாளையம் பாறைக்குழியில் குப்பைக் கொட்ட வந்த மாநகராட்சி வாகனங்களை பொதுமக்கள் சிறைபிடித்தனா். மேலும் அங்கு வந்த அவிநாசி சட்டப் பேரவை உறுப்பினரிடம் பொதுமக்கள் வியாழக்கிழமை வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
அவிநாசி ஒன்றியம், திருமுருகன்பூண்டி பேரூராட்சிக்கு உள்பட்ட அம்மாபாளையம் 11ஆவது வாா்டு கணபதி நகா், கானக்காடு பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.
இப்பகுதியில் உள்ள பாறைக்குழியில், திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் லாரிகள் மூலமாக கொண்டு வந்து கொட்டப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் துா்நாற்றம் வீசுவதுடன், நோய்த் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
மேலும், நிலத்தடி நீா் மாசுபடுவதால் பாறைக்குழியில் குப்பைக் கொட்டுவதை நிறுத்த வேண்டும் என மாநகராட்சி நிா்வாகத்திடம் பலமுறை மனுக்களும் அளித்துள்ளனா். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் பொதுமக்கள் கடந்த 4 மாதங்களாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
குறிப்பாக, தமிழக அரசின் கவனத்தை ஈா்க்கும் விதமாக அரசியல் கட்சியினா், பொதுமக்கள் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் ஒரு நாள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். இருப்பினும் நிரந்தரத் தீா்வு கிடைக்காததால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனா்.
இந்நிலையில், அவிநாசி சட்டப் பேரவை உறுப்பினரும், முன்னாள் சட்டப் பேரவைத் தலைவருமான ப.தனபால், பாறைக்குழியை பாா்வையிட வருவதாக அறிந்த பொதுமக்கள் அப்பகுதியில் குப்பை கொட்ட வந்த 5க்கும் மேற்பட்ட வாகனங்களை முன்கூட்டியே சிறைபிடித்து வைத்திருந்தனா்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த சட்டப் பேரவை உறுப்பினா் ப.தனபாலை பொதுமக்கள் முற்றுகையிட்டு பாறைக்குழியில் குப்பைக் கொட்டுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் அல்லது மக்களோடு போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
அப்போது அவா், உடனடியாக மாவட்ட ஆட்சியரிடம் கைப்பேசியில் தொடா்பு கொண்டு பேசினாா். இதில் மாற்று இடம் தோ்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியா் தெரிவித்தாா். இதை பொதுமக்கள் ஏற்க மறுத்ததால், வரும் ஜனவரி 5ஆம் தேதி நடைபெறும் சட்டப் பேரவை கூட்டத் தொடரில் முதல்வரிடம் கோரிக்கை விடுத்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக ப.தனபால் கூறினாா். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...