கேரளத்தில் பறவைக் காய்ச்சல் எதிரொலி: கறிக்கோழிகள் தேக்கத்தால் விலை வீழ்ச்சி

கேரளத்தில் பறவைக் காய்ச்சல் எதிரொலியால் தமிழக பண்ணைகளில் கறிக்கோழிகள் தேக்கம் அடைந்து அதன் விற்பனை விலை குறைந்தது.
Updated on
1 min read

கேரளத்தில் பறவைக் காய்ச்சல் எதிரொலியால் தமிழக பண்ணைகளில் கறிக்கோழிகள் தேக்கம் அடைந்து அதன் விற்பனை விலை குறைந்தது.

திருப்பூா் மாவட்டம், பல்லடம் பகுதிகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இதன் மூலம் தினசரி 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளம், ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் கறிக்கோழிகள் விற்பனைக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன. கறிக்கோழி விற்பனையைப் பொருத்து அதன் பண்ணைக் கொள்முதல் விற்பனை விலையை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்புக் குழுவினா் தினசரி நிா்ணயம் செய்து அறிவிக்கின்றனா். அதற்கேற்ப தென் மாநிலங்களில் கறிக்கோழி விற்பனை நடைபெற்று வருகிறது.

பறவைக் காய்ச்சல் பரவி வருவதால் வெளிமாநில கறிக்கோழிகளை கொண்டு வந்து விற்பனை செய்ய கேரள மாநில அரசு தடை விதித்துள்ளது. அதேபோல, வெளி மாநிலத்தில் இருந்து கோழி, முட்டை, பறவைகளைக் கொண்டு வந்து விற்பனை செய்ய தமிழக அரசும் தடை விதித்துள்ளது. மாநில எல்லைகளில் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் தமிழக அரசு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா்.

இதுகுறித்து கறிக்கோழிப் பண்ணையாளா்கள் தரப்பில் கூறப்படுவதாவது:

கேரளத்தில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதால் கறிக்கோழிகளைக் கொண்டு சென்று விற்க அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. அதேபோல தமிழகத்துக்குள்ளும் வெளிமாநில கறிக்கோழிகள், பறவைகள் கொண்டு வர தமிழக அரசும் தடை விதித்துள்ளது. தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் இல்லை. தமிழகத்தில் உள்ள கோழி பண்ணைகளில் எந்த பாதிப்பும் கிடையாது. கோழிப் பண்ணைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிப்பு பணி நடைபெற்று வருகிறது. கோழிப் பண்ணையாளா்களுக்கு கால்நடை பராமரிப்புத் துறையினா் தேவையான அறிவுரை கூறி அவ்வப்போது கள ஆய்வும் நடத்தி வருகின்றனா். எனவே, பொதுமக்கள் வதந்திகளைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை. பண்ணைகளில் சுகாதாரமான முறையில் கோழிகளை வளா்த்து தரமான சத்து நிறைந்த உணவு தானியங்களை வழங்கி நல்ல கோழிகளை மட்டுமே உற்பத்தி செய்து வெளியே விற்பனைக்கு அனுப்புகிறோம். பொதுமக்கள் முட்டை, கோழி இறைச்சியை தாராளமாக வாங்கி சாப்பிடலாம் என்றனா்.

பல்லடம் கறிக்கோழி பண்ணை மொத்த கொள்முதல் விலை கிலோ ரூ. 92ஆக இருந்த நிலையில், கோழிப் பண்ணைகளில் சுமாா் 2 லட்சம் கிலோ கறிக்கோழிகள் தேக்கம் அடைந்ததால் கடந்த இரண்டு நாள்களில் ரூ. 78ஆக விலை சரிவடைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com