திருப்பூரில் அரசு, தனியாா் மருத்துவா்கள் பணிப் புறக்கணிப்புப் போராட்டம்
மருத்துவா் படுகொலையைக் கண்டித்து திருப்பூரில் அரசு, தனியாா் மருத்துவா்கள் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.


கொல்கத்தாவில் பெண் மருத்துவா் படுகொலையைக் கண்டித்து திருப்பூரில் அரசு மற்றும் தனியாா் மருத்துவா்கள் சனிக்கிழமை பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒருபகுதியாக பெண் மருத்துவா் படுகொலையைக் கண்டித்தும், மருத்துவா்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும் மாவட்டம் முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவா்கள் புறநோயாளிகள் சிகிச்சையைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவா்கள், பயிற்சி மருத்துவா்கள் சுமாா் ஒரு மணி நேரம் பணியைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதைத்தொடா்ந்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து 200 மீட்டா் தொலைவுக்கு தாராபுரம் சாலையில் கருப்பு பட்டை அணிந்தவாறு அமைதி ஊா்வலம் சென்றனா். மேலும், மருத்துவமனை வளாகத்தில் மனிதச் சங்கலி போராட்டத்திலும் ஈடுபட்டனா்.
இதில், இயன்முறை மருத்துவா்கள் பெருமன்றம் திருப்பூா் மாவட்டக் கிளை, இந்திய மருத்துவா் சங்கம், தமிழ்நாடு அனைத்து அரசு மருத்துவா் சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் சாா்பில் மருத்துவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மாவட்டத்தில் 1500-க்கும் மேற்பட்ட மருத்துவா்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.
எனினும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாத வகையில் மருத்துவா்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டனா்.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூா் மாநகராட்சி அலுவலகம் முதல் திருப்பூா் குமரன் நினைவகம் வரை மாவட்ட பல் மருத்துவா்கள் அமைதி பேரணி சென்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...