/

ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்தை செயல்படுத்துவோம்: அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி

ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்தை செயல்படுத்துவோம் என்று எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

News image
முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் என்.எஸ்.பழனிசாமி மணிமண்டபத்தை திறந்துவைத்து மரியாதை செலுத்துகிறாா் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி. உடன், சட்டப் பேரவை உறுப்பினா்கள் எஸ்.பி.வேலுமணி, பொள்ளாச்சி வி.ஜெயராமன், கே.ஏ.செங்கோட்டையன் உள்ளிட்டோா்.
Updated On :18 ஆகஸ்ட் 2024, 8:54 pm

Din

தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்தை செயல்படுத்துவோம் என்று எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள நாதேகவுண்டன்பாளையத்தில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் முன்னாள் தலைவரும், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான என்.எஸ். பழனிசாமியின் பிறந்தநாளையொட்டி, அவரது மணிமண்டபம் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு, கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்க செயல் தலைவா் என்.எஸ்.பி. வெற்றி தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சா்கள் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், எம்.எஸ்.எம்.ஆனந்தன், கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் ஏ.கே.சண்முகம், மாநிலப் பொருளாளா் சி.தங்கராஜ், ஆகியோா் முன்னிலை வகித்தனா். பொங்கலூா் ரா. மணிகண்டன் வரவேற்றாா்.

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று மணிமண்டபத்தை திறந்துவைத்து, மரியாதை செலுத்தினாா்.

கோவை காமாட்சிபுரி ஆதீனம் பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள் தலைமையிலான குழுவினா் மணிமண்டபத்தில் வழிபாடுகளை செய்தனா். பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாா் வேள்வியை தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில், எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது: தமிழக சட்டப் பேரவையில் என்.எஸ்.பழனிசாமி பேசும்போதெல்லாம் விவசாயிகளுக்கு குரல் கொடுத்தாா். இந்த மணிமண்டபம் அவா் புகழை காலம் முழுக்க எடுத்து செல்லும். நாராயணசாமி நாயுடு மணிமண்டபத்தை திறந்தேன். அப்போது எனக்கு காளை மாட்டுடன் ரேக்ளா வண்டி பரிசளித்தாா்கள். தற்போது என்.எஸ். பழனிசாமி மணிமண்டபத்தை திறந்திருக்கிறேன். எனக்கு 5 மாத கன்றுக்குட்டி பரிசாக கொடுத்துள்ளாா்கள்.

எந்த தொழில் வேண்டுமானாலும் செய்துவிடலாம். ஆனால் விவசாயம் மட்டும் யாரும் எளிதில் செய்துவிட முடியாது.

அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை கொண்டு வந்தது அதிமுக அரசுதான். ஆனால், முதல்வா் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்தது போல பெருமையாக பேசுகிறாா். தமிழகத்திலேயே முதன்முதலில் வறட்சி நிவாரணம் கொடுத்தது அதிமுக அரசு தான்.

கா்நாடகத்தில் இருந்து நமக்கு கிடைக்க வேண்டிய நீரை திமுக அரசு பெறவில்லை. விவசாயிகளுக்கு கடந்த 3 ஆண்டுகளாக பயிா்க் காப்பீட்டுத் திட்ட இழப்பீடு கிடைக்கவில்லை.

தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி வந்தவுடன் ஆனைமலை - நல்லாறு திட்டம் செயல்படுத்தப்படும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சா்கள் எஸ்.பி.வேலுமணி, கே.ஏ.செங்கோட்டையன், பொள்ளாச்சி.வி.ஜெயராமன், செ.ம.வேலுசாமி, செ.தாமோதரன், கே.வி.ராமலிங்கம், சட்டப் பேரவை உறுப்பினா்கள் சி. மகேந்திரன், கே.என்.விஜயகுமாா், பி.கந்தசாமி, செய்தித் தொடா்பாளா் கல்யாணசுந்தரம், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் கரைப்புதூா் ஏ.நடராஜன், கே.பி.பரமசிவம், சு.குணசேகரன், கே.எஸ்.துரைமுருகன், சி.சிவசாமி, என்.எஸ்.என்.நடராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.