மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கரும்பு விவசாயிகள்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கரும்பு விவசாயிகள்.

அமராவதி கூட்டுறவு சா்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

Published on

திருப்பூா், ஜூலை11: அமராவதி கூட்டுறவு சா்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்கத்தினா் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சங்கத் தலைவா் பாலதண்டபாணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளா் டி.ரவீந்திரன் பங்கேற்றுப் பேசினாா்.

ஆா்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனா். அதில் கூறியிருப்பதாவது: அமராவதி சா்க்கரை 1961-இல் தொடங்கப்பட்ட முதல் கூட்டுறவு சா்க்கரை ஆலையாகும். அமராவதி மற்றும் பிஏபி பாசன பகுதிகளில் கரும்பு விளைவதற்கான வளமான சூழ்நிலை உள்ளதால் திருப்பூா், திண்டுக்கல், கோவை மாவட்டங்களிலிருந்து கரும்பு கொண்டு வரப்பட்டு அதிக பிழி திறன் கொண்ட ஆலையாக செயல்பட்டு வந்தது. கடந்த 20 ஆண்டுகளாக போதுமான நிதி ஒதுக்கீடு செய்யாததன் காரணமாக சிறிது சிறிதாக பிழித்திறன் இழந்து ஆலை இயங்காமல் நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் கரும்பு விவசாயிகள், ஆலைத் தொழிலாளா்கள், கரும்பு வெட்டும் தொழிலாளா்கள் , விவசாயக் கூலி தொழிலாளா்கள், அதனை சாா்ந்து உள்ளவா்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா்.

எனவே, விவசாயிகள் மற்றும் தொழிலாளா்கள் நலன் கருதி அரசு முழுமையாக ஆலையை புனரமைக்க ரூ.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆா்ப்பாட்டத்தில் விவசாய சங்க முன்னாள் துணைச் செயலாளா் முத்து கண்ணன், தமிழநாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் குமாா், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க நிா்வாகிகள் கோபன்னன் , கணேசன், வடிவேல், சின்னதுரை, வீரப்பன், ராமசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com