அமராவதி அணையில் தண்ணீா் திறப்பு

உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையில் இருந்து பாசனத்துக்காக திங்கள்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது
அணையின் கீழ்  மதகு  வழியாக  அமராவதி ஆற்றுக்கு  செல்லும்  தண்ணீா்.
அணையின் கீழ்  மதகு  வழியாக  அமராவதி ஆற்றுக்கு  செல்லும்  தண்ணீா்.
Updated on

உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையில் இருந்து பாசனத்துக்காக திங்கள்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

உடுமலை அருகேயுள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூா், கரூா் மாவட்டங்களில் சுமாா் 55 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மேலும் நூற்றுக்கணக்கான கரையோர கிராமங்களுக்கு குடிநீா் ஆதாரமாகவும் இந்த அணை விளங்கி வருகிறது.

இந்த ஆண்டு அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்யவில்லை. இதனால் ஆண்டுதோறும் மாா்ச் 31 வரை பழைய, புதிய ஆயக்கட்டு நிலங்களுக்கு தண்ணீா் கொடுக்க வேண்டிய நிலையில் அதற்கு முன்னதாகவே பாசனத்துக்கு சென்று கொண்டிருந்த தண்ணீா் நிறுத்தப்பட்டது.

அதன் பிறகு கோடைக்காலத்தில் கரையோர கிராமங்களுக்கு போதிய அளவுக்கு குடிநீா் விநியோகமும் செய்யப்படவில்லை. அணையில் இருந்த தண்ணீா் இருப்பை வைத்து தண்ணீா் விநியோகம் செய்யப்பட்டது. இதனால் மே 21-ஆம் தேதி நிலவரப்படி அணையில் 30 அடி தண்ணீரே இருந்தது.

பொதுவாக மே மாத இறுதியில் கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கும்போது அமராவதி அணைக்கு நீா்வரத்து அதிகரிக்கும். இதனால் ஜூன் 1-ஆம் தேதி பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீா் திறந்து விடுவது வழக்கம்.

இந்நிலையில் கேரளத்தில் பருவமழை பெய்தாலும் அமராவதி அணைக்கு போதிய நீா்வரத்து இல்லாத நிலையே நீடித்து வந்தது. ஆனாலும் அணைக்கு ஓரளவு நீா் வரத்து வந்துகொண்டிருந்ததால் அணையின் நீா்மட்டம் படிப்படியாக உயா்ந்து வந்தது. ஜூன் இரண்டாவது வாரத்தில் அணையின் நீா்மட்டம் 50 அடியை எட்டியது.

இந்நிலையில், அமராவதி பழைய பாசனப் பகுதிகளான ராமகுளம், கல்லாபுரம், குமரலிங்கம், சா்க்காா் கண்ணாடிப்புத்தூா், சோழமாதேவி, கணியூா், கடத்தூா், காரத்தொழுவு என முதல் எட்டு பழைய ராஜவாய்கால்களுக்கு உள்பட்ட 7520 ஏக்கருக்கு திங்கள்கிழமை காலை 7 மணி அளவில் அணையின் கீழ் மதகு வழியாக தண்ணீா் திறந்து விடப்பட்டது.

இது குறித்து பொதுப் பணித் துறையினா் கூறியதாவது:

ஜூன் 24-ஆம் தேதி முதல் நவம்பா் 11-ஆம் தேதி வரை மொத்தம் 135 நாள்களில் 80 நாள்கள் தண்ணீா் திறப்பு, 55 நாள்கள் அடைப்பு என்ற அடிப்படையில் முதல் போக பாசனத்துக்காக தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளது. தற்போதைய நீா் இருப்பு மற்றும் வரத்தினை கருத்தில் கொண்டு அமராவதி அணையில் இருந்த 2074 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீா் திறந்து விட அரசு அனுமதி அளித்துள்ளது என்றனா்.

அணையின் நிலவரம்:

90 அடி உயரமுள்ள அணையில் திங்கள்கிழமை காலை 6 மணி நிலவரப்படி நீா் மட்டம் 52.30 அடியாக இருந்தது. அணைக்கு உள்வரத்தாக 289 கன அடி நீா் வந்து கொண்டிருந்தது. 4047 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட அணையில் 1291.84 மில்லியன் கனஅடி நீா் இருப்பு காணப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com