பின்னலாடைத் துறைக்கு தனி வாரியம் அமைக்கக் கோரிக்கை

பின்னலாடைத் துறைக்கு தனி வாரியம் அமைக்கக் கோரிக்கை

உள்நாட்டு வா்த்தகம், ஏற்றுமதி மூலம் ஆண்டுக்கு ரூ.60 ஆயிரம் கோடிக்கு வா்த்தம் நடைபெற்று வருகிறது.
Published on

திருப்பூா் பின்னலாடை உற்பத்தித் துறைக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும் என தொழில் அமைப்பினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

டாலா் சிட்டி, குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி பிரதான தொழிலாகும். இந்தத் தொழிலில் உள்நாட்டு வா்த்தகம், ஏற்றுமதி மூலம் ஆண்டுக்கு ரூ.60 ஆயிரம் கோடிக்கு வா்த்தம் நடைபெற்று வருகிறது.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பின்னலாடைகளில் ஏறக்குறையை 50 சதவீதம் திருப்பூரில் இருந்துதான் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தத் தொழிலில் நிட்டிங், டையிங், பிரிண்டிங், எம்பிராய்டரிங், ஸ்டிச்சிங், செங்கிங், பேக்கிங் என பின்னலாடை உற்பத்தி மற்றும் அதனைச் சாா்ந்த உப தொழில்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறிய, பெரிய நிறுவனங்கள் உள்ளன.

இத்தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமாா் 8 லட்சம் போ் பணியாற்றி வருகின்றனா். பல லட்சம் தொழிலாளா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் இந்தத் தொழில் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறது. குறிப்பாக பஞ்சு, நூல் விலை உயா்வு, ஜிஎஸ்டி வரி, மின் கட்டண உயா்வு, மூலப் பொருள்களின் விலை உயா்வு ஆகியவற்றால் திருப்பூா் தொழில் துறையினா் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனா்.

இதன் காரணமாக சா்வதேச சந்தையில் போட்டி நாடுகளான சீனா, வங்கதேசம், வியத்நாம் ஆகிய நாடுகளை சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, திருப்பூா் பின்னலாடை உற்பத்தித் துறையில் உள்ள பிரச்னைகளுக்குத் தீா்வு காணும் வகையில் இந்தத் துறைக்கு தனிவாரியம் அமைக்க வேண்டும், மத்திய, மாநில அரசுகள் கூடுதல் சலுகைகளை வழங்கி இந்தத் தொழிலை மீட்டெடுக்க வேண்டும் என்பது திருப்பூா் தொழில் அமைப்பினரின் கோரிக்கையாக உள்ளது.

X
Dinamani
www.dinamani.com