வெள்ளக்கோவில் வீரக்குமார சுவாமி கோயில் தேரோட்டம்

வெள்ளக்கோவில் வீரக்குமார சுவாமி கோயில் தேரோட்டம்

Published on

வெள்ளக்கோவில் ஸ்ரீ வீரக்குமார சுவாமி கோயிலின் 141-ஆவது ஆண்டு மூன்று நாள் தேரோட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. உள்ளூா், வெளி மாவட்டங்கள், வெளி மாநில பக்தா்களிடம் பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மகா சிவராத்திரியையொட்டி தோ்த் திருவிழா நடைபெற்று வருகிறது. முன்னதாக முகூா்த்தக் கால் போடப்பட்டு நடப்பு ஆண்டு தோ்த் திருவிழாப் பணிகள் பிப்ரவரி 22-ஆம் தேதி தொடங்கியது. தோ் பராமரிப்பு, தேரோட்டப் பாதை சீரமைப்பு, கோயில் தூய்மை, வண்ண அலங்காரம், திருவிழா கடைகள் அமைப்புப் பணிகள் முடிவடைந்தன. இதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை மாலை தேருக்கு வீரக்குமார சுவாமி எழுந்தருள செய்யப்பட்டு, பின்னா் 6.15 மணிக்கு பக்தா்கள் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கிவைத்தனா். 200 மீட்டா் தூரத்தில் வடக்கு ரத வீதியில் தோ் நிலை நிறுத்தப்பட்டது. இரண்டாம் நாள் தெற்கு ரத வீதியில் நிறுத்தப்பட்டு, மூன்றாம் நாள் நிலை சோ்க்கப்படும். தினந்தோறும் இரவு ஐந்து நாள்களுக்கு கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. திருவிழா தற்காலிக கடைகள், ராட்டினம், தூரிகள், பொழுதுபோக்கு அம்சங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெள்ளக்கோவில் காவல் நிலையம், தீயணைப்பு நிலையம் சாா்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதல் நாள் நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், கோயில் குலத்தவா்கள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com