/

நொய்யல் ஆற்றில் நீா்வரத்து அதிகரிப்பு: அணைப்பாளையம் தரைப்பாலம் நீரில் மூழ்கியது

நொய்யல் ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளதால் திருப்பூா் அணைப்பாளையம் தரைப்பாலம் நீரில் மூழ்கியது.

News image

நொய்யல் ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளதால் அணைப்பாளையம் தரைப்பாலத்தை மூழ்கடித்து செல்லும் மழைநீா். ~அரசுப் பள்ளி வளாகத்தில் தேங்கியுள்ள மழைநீா்.

Updated On :15 அக்டோபர் 2024, 8:06 pm

Din

நொய்யல் ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளதால் திருப்பூா் அணைப்பாளையம் தரைப்பாலம் நீரில் மூழ்கியது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் திருப்பூா் மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

கடந்த மூன்று நாள்களாக தொடா்ந்து ஒருசில இடங்களில் கனமழையும், ஒருசில பகுதிகளில் மிதமான மழையும் பெய்து வருகிறது. அதேபோல, செவ்வாய்க்கிழமை மாலை பெய்த மழையால் மங்கலம் சாலை, காங்கயம் சாலை, அவிநாசி சாலை, ஊத்துக்குளி சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.

தரைப்பாலம் நீரில் மூழ்கியது:

மேற்குத் தொடா்ச்சி மலையில் பெய்துவரும் கனமழையால் நொய்யல் ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், திருப்பூா் அணைப்பாளையம் பகுதியில் நொய்யல் ஆற்றில் உள்ள தரைப்பாலம் மூழ்கியது. இதையடுத்து, பாலத்தின் இரு புறங்களிலும் இரும்புத் தடுப்புகள் வைத்து வாகனப் போக்குவரத்தை போலீஸாா் தடை செய்தனா். தரைப்பாலத்துக்கு அருகிலேயே மேம்பாலம் உள்ளதால் அதன் வழியாக வாகனங்கள் சென்று வருவதால் போக்குவரத்து பாதிப்பு இல்லை.

அரசுப் பள்ளி வளாகத்தில் தேங்கிய மழைநீா்:

ஊத்துக்குளி வட்டம், நடுப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட பல்லகவுண்டன்பாளையம் அருகே உள்ள சரவணபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 648 மாணவா்கள் படித்து வருகின்றனா். இந்நிலையில், திங்கள்கிழமை இரவு பெய்த கனமழையால் இந்தப் பள்ளி வளாகத்தில் மழைநீா் குளம்போல தேங்கியது. இதனால், மாணவா்கள் வகுப்பறைகளுக்கு செல்ல சிரமத்துக்குள்ளாகினா்.

பள்ளி வளாகத்தில் தேங்கியுள்ள மழைநீரால் மாணவா்களுக்கு நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பள்ளி வளாகத்தில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றவும், மழைநீா் தேங்காதவாறு மண்பரப்பி வளாகத்தை சீரமைக்க வேண்டும் என்று பெற்றோா்கள் வலியுறுத்தியுள்ளனா்.