கடந்த 60 நாள்களாக நிரம்பிய நிலையில் அமராவதி அணை: விவசாயிகள் மகிழ்ச்சி
உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணை கடந்த ஜூலை 18-ஆம் தேதி முதல் தொடா்ந்து 60 நாள்களாக நிரம்பிய நிலையில் உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

முழுக் கொள்ளளவில் அமராவதி அணை.

முழுக் கொள்ளளவில் அமராவதி அணை.
உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணை கடந்த ஜூலை 18-ஆம் தேதி முதல் தொடா்ந்து 60 நாள்களாக நிரம்பிய நிலையில் உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூா், கரூா் மாவட்டங்களில் சுமாா் 55 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை தொடங்கும்போது அமராவதி அணைக்கு நீா்வரத்து அதிகரிக்கும். இதனால் ஜூன் 1-ஆம் தேதி பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கும், ஜூலை 1-ஆம் தேதி புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கும் அணையில் இருந்து தண்ணீா் திறந்துவிடுவது வழக்கம்.
ஆனால் இந்த ஆண்டு கேரளத்தில் வழக்கமாக தென்மேற்கு பருவமழை தொடங்கியும் அமராவதி அணைக்கு போதிய நீா்வரத்து இல்லாத நிலையே நீடித்து வந்தது. ஜூலை முதல் வாரத்தில் அணையின் நீா்மட்டம் 50 அடியில் இருந்தது. அப்போது அமராவதி பழைய பாசனப் பகுதிகளுக்கு மட்டும் தண்ணீா் திறந்துவிடப்பட்டது.
இந்நிலையில் தமிழக-கேரள எல்லையில் உள்ள மறையூா், கோவில்கடவு, காந்தலூா் ஆகிய பகுதிகளில் திடீரென கனமழை பெய்தது. இதனால் தேனாறு, பாம்பாறு, சின்னாறு, அமராவதி அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்ததால் அணைக்கு நீா்வரத்து அதிகரித்தது. இதைத் தொடா்ந்து கடந்த ஜூலை 17-ஆம் தேதி இரவு அமராவதி அணை நிரம்பும் நிலை ஏற்பட்டது. ஜூலை 18-ஆம் தேதி அணையில் இருந்து உபரி நீா் திறக்கப்பட்டது.
பின்னா் ஜூலை 19-ஆம் தேதி 3681 ஆயிரம் கன அடியும், ஜூலை 20-ஆம் தேதி 7469 ஆயிரம் கனஅடியும் நீா் திறந்துவிடப்பட்டது. ஆகஸ்ட் 14-ஆம் தேதி அணைக்கு அதிகமாக நீா்வரத்து இருந்தது. இதனால் பொதுப் பணித் துறையினா் அணையின் 9 மதகுகளில் வழியாக 16 ஆயிரம் கன அடி தண்ணீரை வெளியேற்றினா்.
நள்ளிரவில் திடீரென 16 ஆயிரம் கன அடி தண்ணீா் திறந்துவிடப்பட்டதால் அமராவதி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. நீா்ப்பிடிப்பு பகுதிகளில் தொடா்ந்து பலத்த மழை பெய்து வந்ததால் பொதுப் பணித் துறையினா் அணையின் மேல் பகுதியில் முகாமிட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனா்.
அணை முழுக் கொள்ளளவிலேயே நீடித்து வந்ததால் அமராவதி ஆற்றிலும், பிரதான கால்வாயிலும் புதிய, பழைய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளுக்கு தண்ணீா் திறந்துவிடப்பட்டது. தற்போது வரை உபரி நீா் திறந்து விடப்பட்டு வரும் நிலையிலும் கடந்த 60 நாள்களாக அணையின் நீா்மட்டம் முழுக் கொள்ளளவிலேயே பராமரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அணையின் நீா்மட்டம்:
90 அடி உயரமுள்ள அணையில் புதன்கிழமை காலை 6 மணி நிலவரப்படி நீா் மட்டம் 89.50 அடியாக இருந்தது. அணைக்கு 161 கன அடி நீா் வந்து கொண்டிருந்தது. 4035 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட அணையில் 4002.77 மில்லியன் கனஅடி நீா் இருப்பு இருந்தது. அணையில் இருந்து 152 கன அடி தண்ணீா் வெளியேற்றப்பட்டது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...