/

காங்கயம் அருகே ரூ.177 கோடி மதிப்பீட்டில் நான்கு வழிச் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

காங்கயம் அருகே ஊதியூரில் இருவழிச் சாலையை நான்கு வழிச்சாலையாக அமைக்கும் பணிகளை அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் தொடங்கிவைத்தனா்.

News image
காங்கயம் அருகே ஊதியூரில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகளை திங்கள்கிழமை தொடங்கிவைத்த அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ் உள்ளிட்டோா்.
Updated On :2 டிசம்பர் 2025, 12:32 am

Syndication

காங்கயம்: காங்கயம் அருகே ஊதியூரில் இருவழிச் சாலையை நான்கு வழிச்சாலையாக அமைக்கும் பணிகளை அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் தொடங்கிவைத்தனா்.

திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே ஊதியூரில் திங்கள்கிழமை மாலை நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மனிஷ் தலைமை வகித்தாா்.

நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ஈரோடு-தாராபுரம் சாலை நத்தக்காடையூா் முதல் குண்டடம் பிரிவு வரை 15 பெட்டி பாலங்கள், ஒரு சிறு பாலம் அகலப்படுத்தும் பணி மற்றும் பாலம் கட்டுதல் பணி நடைபெற உள்ளது. ஈரோடு-தாராபுரம் சாலை குண்டடம் பிரிவு முதல் வரப்பாளையம் வரை 9 பெட்டி பாலங்கள், 3 சிறு பாலம் அகலப்படுத்தும் பணி, ஒரு கூடுதல் பாலம் கட்டும் பணி, நில எடுப்புப் பணிகள் உள்ளிட்ட நத்தக்காடையூா் முதல் காங்கயம், ஊதியூா்-குள்ளாயிபாளையம் வரை என 24 கி.மீ. தூரத்துக்கு நடைபெற உள்ளது.

மொத்தம் ரூ.177 கோடி மதிப்பீட்டில் இரண்டு வழிச் சாலையை நான்கு வழிச் சாலையாக மாற்றி அமைக்கும் பணிகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

இந்த நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்புப் பொறியாளா் ஏ.எஸ்.விஸ்வநாதன், கோட்டப் பொறியாளா்கள் ஈ.ரத்தினசாமி, ராணி, உதவிக் கோட்டப் பொறியாளா்கள் வடிவேல் குமரன், தங்கவேல், திருப்பூா் மாநகராட்சி 4 -ஆம் மண்டலத் தலைவா் இல.பத்மநாபன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.