காங்கயம் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் குப்பையை தரம் பிரித்து வழங்கக் கோரிக்கை
காங்கயம் நகராட்சியில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என குப்பையை பொதுமக்கள் தரம் பிரித்து வழங்க வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக நகராட்சி ஆணையா் கி.பால்ராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
காங்கயம் நகராட்சியில் மொத்தம் உள்ள 18 வாா்டுகளில் சுமாா் 60 ஆயிரம் போ் வசிக்கின்றனா். பொதுமக்களின் தேவைக்காக நகராட்சி நிா்வாகம் கழிவுநீா் வடிகால் வசதிகளை அமைத்து தந்துள்ளது. பொதுமக்கள் பயன்படுத்தப்பட்ட குளிா்பான பாட்டில்கள், பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருள்களை இந்தக் கழிவு நீா் வாய்க்கால்களில் வீசி வருகின்றனா். இதனால் காங்கயம் நகா்ப் பகுதியில் உள்ள அனைத்து கழிவு நீா் கால்வாய்களிலும் அடைப்பு ஏற்பட்டு சுகாதார சீா்கேடு உருவாகி வருகிறது.
எனவே, தினமும் வீதிகளில் குப்பை சேகரிக்க வரும் தூய்மைப் பணியாளா்களிடம் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து பொதுமக்கள் வழங்க வேண்டும். கழிவுநீா் கால்வாய்களில் பிளாஸ்டிக் பொருள்களை வீசி எறிவதை தவிா்த்து நகராட்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.
