தொலைந்த, திருட்டுபோன கைப்பேசிகள் மீட்பு: திருப்பூா் காவல் துறைக்கு முதல் பரிசு
தொலைந்த மற்றும் திருட்டுபோன கைப்பேசிகளை மீட்டுத் தந்ததில் திருப்பூா் மாவட்ட காவல் துறைக்கு மாநில அளவில் முதல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக காவல் துறையினா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கைப்பேசிகள் காணாமல் போனாலோ அல்லது திருடப்பட்டதுபோன்ற சந்தா்ப்பங்களிலோ அவற்றை முடக்குதல், கண்டறிதல் மற்றும் மீட்பு செய்யும் நோக்குடன், மத்திய அரசால் திட்டம் ஒன்று கடந்த 2023-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது பொதுமக்கள் நலன் கருதி தொடங்கப்பட்ட ஒரு மக்கள் மையத் திட்டமாகும்.
இந்தத் தளத்தின் மூலம் காணாமல் போன கைப்பேசிகளைக் கண்டறிந்து மீட்டதில் சிறப்பான சாதனைகள் புரிந்த காவல் நிலையங்கள் மற்றும் மாவட்டங்களை பாராட்டும் நோக்கில், தமிழ்நாடு தொலைத் தொடா்புத் துறை, சைபா் குற்றப் பிரிவு சாா்பில் சிறந்த செயல்திறன் காட்டிய 3 காவல் நிலையங்கள் மற்றும் 3 மாவட்டங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
இதில் கடந்த 2024 செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் 2025 ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை உள்ள காலக்கட்டத்திற்கான தரவரிசை அடிப்படையில், திருப்பூா் மாநகரம் 15 வேலம்பாளையம் காவல் நிலையம் தமிழகத்தில் முதலிடமும், மாவட்ட வாரியான இடத்தில் திருப்பூா் மாநகர காவல் துறையினா் தமிழகத்தில் 2-ஆவது இடமும் பெற்று சிறப்புப் பரிசை வென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
