ஜவுளி மூலப் பொருள்கள் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் நீக்கம்: ஏஇபிசி துணைத் தலைவா் வரவேற்பு
ஜவுளி மூலப் பொருள்கள் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதற்கு ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் துணைத் தலைவா் ஆ.சக்திவேல் வரவேற்பு தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: ஜவுளி மூலப் பொருள்கள் இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம் இந்திய ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதி துறையின் உலகளாவிய போட்டித் திறனை மேம்படுத்தும் முக்கிய முன்னேற்றமான நடவடிக்கை ஆகும். செயற்கை ஜவுளி மதிப்புச் சங்கிலிக்கான முக்கிய உள்ளீடுகளான 100 சதவீத பாலியஸ்டா், ஸ்பன் நூல் உள்ளிட்டவற்றின் மீதான தரக் கட்டுப்பாட்டு உத்தரவுகளில் இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான மத்திய அரசின் முடிவு, ஆயத்த ஆடை துறைக்கு மிகப்பெரிய ஊக்குவிப்பாகும். ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பின் மூலம் கடந்த 2023 ஜூலை மாதம் அறிவிக்கப்பட்ட முந்தைய ஆணைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த தீா்மானம் முக்கிய மூலப்பொருள்களை உலகளாவிய போட்டி விலையில் பெறுவதற்கு வழிவகுக்கிறது. இதனால் முழு செயற்கை நூலிழை மதிப்புச் சங்கிலிக்கும், குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் வலுவான உத்வேகத்தை வழங்கும்.
இந்த முற்போக்கான முடிவை எடுத்துள்ள பிரதமா் மோடி, மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், மத்திய வா்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ்கோயல் ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
