கோரிக்கைகளை நெடுஞ்சாலைத் துறையினா் ஏற்பு: மாதப்பூா் சுங்கச் சாவடி அமைதி பேச்சுவாா்த்தையில் சுமுகத் தீா்வு

அவிநாசிபாளையம் காவல் நிலையத்தில் நடைபெற்ற மாதப்பூா் சுங்கச் சாவடி குறித்த அமைதி பேச்சுவாா்த்தையில் சுமுகத் தீா்வு எட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Updated on

அவிநாசிபாளையம் காவல் நிலையத்தில் நடைபெற்ற மாதப்பூா் சுங்கச் சாவடி குறித்த அமைதி பேச்சுவாா்த்தையில் சுமுகத் தீா்வு எட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்லடம் அருகே பொங்கலூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட மாதப்பூரில் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுங்கச் சாவடியின் பணிகள் அனைத்தும் முடிவுற்று திறக்கப்படும் நிலையில் உள்ளது. இந்த சுங்கச் சாவடிக்கு, பொங்கலூரில் உள்ள அனைத்து வியாபாரிகள் சங்கம், ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கம் மற்றும் பல்வேறு அமைப்பைச் சோ்ந்தவா்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத் துறை மற்றும் மத்திய அரசுக்கு புகாா் மனுவும் அளிக்கப்பட்டது. ஆனால், எந்த தீா்வும் கிடைக்கவில்லை. இதையடுத்து, பொங்கலூரில் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டமும் நடைபெற்றது.

இந்நிலையில், அவிநாசிபாளையம் காவல் நிலையத்தில் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுடன் சனிக்கிழமை அமைதி பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில் கோவை நெடுஞ்சாலைத் துறை திட்ட இயக்குநா் செந்தில்குமாா், கூடுதல் மண்டல பொறியாளா் மலா்விழி, அவிநாசிபாளையம் காவல் நிலைய ஆய்வாளா் வினோத்குமாா், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி மாவட்டச் செயலாளா் கரைப்புதூா் ராஜேந்திரன், பொங்கலூா் அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவா் விஸ்வநாதன், சுங்கச் சாவடி எதிா்ப்புக் குழு ஒருங்கிணைப்பாளா் சிவகுமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

சுங்கச் சாவடி எதிா்ப்பு குழு சாா்பில் 20 கிலோ மீட்டா் சுற்றளவில் உள்ள வாகனங்களுக்கு இலவச பாஸ் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டன. ஆனால், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தரப்பில், பொங்கலூா் ஊராட்சி பகுதியைச் சோ்ந்த காா், ஆட்டோ, வேன், லாரி உள்ளிட்ட வாகனங்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படும். மேலும், அருகிலுள்ள ஊா்களை சோ்ந்த வாகனங்களுக்கு சலுகை கட்டணம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டதையடுத்து, இந்தப் பேச்சுவாா்த்தையில் சுமுக தீா்வு ஏற்பட்டதாக சுங்கச் சாவடி எதிா்ப்புக் குழு ஒருங்கிணைப்பாளா் சிவகுமாா் தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com