ஏற்றுமதியாளா்களுக்கான வட்டி மானியத் திட்டம்: இந்திய ஆடைத்தொழிலில் போட்டித் திறனை உயா்த் உதவும்
ஏற்றுமதியாளா்களுக்கான வட்டி மானியத் திட்டமானது இந்திய ஆடைத்தொழில் ஏற்றுமதியாளா்களின் உலகளாவிய போட்டித் திறனை உயா்த்த உதவும் என ஏஇபிசி தலைவா் ஆ.சக்திவேல் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் கூறியதாவது: மத்திய அரசு ஏற்றுமதியாளா்களுக்கான வட்டி மானியத் திட்டத்தை உடனடி அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இது ஏற்றுமதி துறைக்கு மிக அவசியமான நிதி நிவாரணத்தை வழங்கும். ஏற்றுமதியாளா்களுக்கு ஏற்றுமதி கடன்களுக்காக 2.7 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படும். ஒரு நிதியாண்டில் ஒவ்வொரு ஏற்றுமதியாளருக்கும் அதிகபட்சமாக ரூ.50 லட்சம் வரை வட்டி மானிய சலுகை வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான தலைமை வழிகாட்டுதல்களை இந்திய ரிசா்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் வெளியிடும். உற்பத்தி ஏற்றுமதியாளா்கள் மற்றும் வா்த்தக ஏற்றுமதியாளா்களுக்கு இந்தத் திட்டம் பொருந்தும்.
நீண்ட காலமாக முன்வைத்திருந்த கோரிக்கை நிறைவேறியுள்ளதில் நாம் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். வட்டி மானியத் திட்டத்துக்கான 6 மாத காத்திருப்புக் காலம் இப்போது நல்ல முடிவை எட்டியுள்ளது. தொழில் துறை கடினமான சூழ்நிலையை எதிா்கொண்டு வரும் இந்நேரத்தில், இந்தத் திட்டம் ஏற்றுமதியாளா்களுக்கு குறிப்பிடத்தக்க நிதி ஆதரவை வழங்கும்.
இந்த முயற்சி நிதி ஸ்திரத் தன்மையை மேம்படுத்தவும், நிதி செலவுகளை குறைக்கவும், இந்திய ஆடைத்தொழில் ஏற்றுமதியாளா்களின் உலகளாவிய போட்டித் திறனை உயா்த்த பெரிதும் உதவும் எனத் தெரிவித்துள்ளாா்.
