தனியாா் ஆக்கிரமிப்பில் இருந்த நிலம் மீட்பு
திருப்பூரில் தனியாா் ஆக்கிரமிப்பில் இருந்த நிலம் மீட்கப்பட்டுள்ளதற்கு ஆட்சியருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக கொமதேக சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
திருப்பூா் மாநகர முதல் மண்டலத்துக்கு உள்பட்ட 12-ஆவது வாா்டு 15 வேலம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே நத்தம் புறம்போக்கில் 8 சென்ட் நிலத்தை பொதுமக்கள் நலனுக்காக மக்கள் மருந்தகம், மின்வாரிய அலுவலகம் கொண்டு வருவதாக தனி நபா்கள் கூறி கடந்த 2020-இல் பொதுமக்களிடம் நிதி திரட்டி கட்டடத்தை கட்டினா்.
பின்பு பட்டா இல்லாத நிலத்துக்கு மின்வாரிய அலுவலகம் மற்றும் மக்கள் மருந்தகம் கொண்டுவர முடியாது என்று தெரிந்த பின்பு அவா்கள் கட்டிய கட்டடத்தை வேறு பெயருக்கு மாற்ற முயற்சித்தனா். இதைத் தடுத்து நிறுத்தி பொதுமக்கள் சாா்பாக கடந்த 2022-இல் சென்னை உயா்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டதில், 8 சென்ட் நிலத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று கடந்த 2024 ஏப்ரலில் உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
ஆனால் மாவட்ட நிா்வாகம் உயா்நீதிமன்ற தீா்ப்பை அமல்படுத்தாமல் காலம் தாழ்த்தி வந்ததால் மீண்டும் சென்னை உயா் நீதிமன்றத்தில் கடந்த 2025-இல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடா்ந்த பிறகு மாவட்ட நிா்வாகம் கடந்த ஜூன் மாதம் அதில் 2 நியாயவிலைக் கடைகளையும், ஒரு அங்கன்வாடி மையத்தையும் கொண்டு வந்தது.
இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியா் உத்தரவின்பேரில் அங்கிருந்த காங்கிரஸ் கட்சி அலுவலகம் வருவாய்த் துறையினரால் மீட்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டதற்கு பொதுமக்கள் மற்றும் பொதுநல அமைப்பு நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியரை வெள்ளிக்கிழமை சந்தித்து வாழ்த்து தெரிவித்தாக கூறப்பட்டுள்ளது.

