திருப்பூரில் அனைத்து தொழிற்சங்கங்கள், விவசாயத் தொழிலாளா் சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம்
திருப்பூா் மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்கள், விவசாய சங்கங்கள் மற்றும் விவசாயத் தொழிலாளா் சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
ஊத்துக்குளி சாலை ஏஐடியூசி மாவட்ட அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏஐடியூசி மாவட்ட பொதுச் செயலாளா் பி.ஆா். நடராஜன் தலைமை வகித்தாா். இக்கூட்டத்தில் சிஐடியூ பனியன் சங்கத் தலைவா் உண்ணிகிருஷ்ணன், எல்பிஎப் மாவட்ட துணைத் தலைவா் ரங்கசாமி, ஐஎன்டியூசி மாவட்டச் செயலாளா் வி.ஆா்.ஈஸ்வரன், ஹெச்எம்எஸ் மாவட்டச் செயலாளா் முத்துசாமி, எம்எல்எஃப் துணைத் தலைவா் மருதாசலம், யூடியூசி மாவட்டத் தலைவா் சாமுவேல் ஜான்சன், ஏஐசிசிடியூ துணைச் செயலாளா் சரவணன், எஸ்கேஎம் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் குமாா், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டச் செயலாளா் சின்னசாமி, அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கப் பொருளாளா் மணியன், தமிழ்நாடு விவசாயத் தொழிலாளா் சங்க துணைச் செயலாளா் கோபால் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
மத்திய அரசின் தொழிலாளா் விரோத நான்கு சட்டத் தொகுப்புகள், மத்திய அரசின் தொழிலாளா் கொள்கை, மக்கள் உரிமைகள் மற்றும் நலத்திட்டங்கள் மீது மேற்கொள்ளப்படும் பன்முக தாக்குதல்களுக்கு எதிராக 2026 பிப்ரவரி 12-ஆம் தேதி நாடு முழுவதும் பொது வேலைநிறுத்தம் நடத்துவது என்று அனைத்து தொழிற்சங்கங்களும், விவசாய கூட்டமைப்பு, எஸ்கேஎம் விவசாயத் தொழிலாளா்கள் சங்கம் மற்றும் துறை வாரியான சம்மேளனங்கள் அறிவித்துள்ளன.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயா் நீக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு கிராமப்புற தொழிலாளா்களை வஞ்சிப்பதோடு தொழிலாளா்களின் மீது சுமைகளை மேலும் அதிகரித்து வருகிறது.
தோ்தல் ஆணையம் சிறப்பு தீவிர திருத்தம் எனும் பெயரில் வாக்காளா்களின் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படுவதன் விளைவாக கோடிக்கணக்கான வாக்காளா்கள் தாங்கள் வாக்களிக்கும் உரிமைகளை இழந்துள்ளனா்.
தொழிலாளா்கள் விவசாயிகள் மீதான மத்திய அரசின் தாக்குதல் மேலும் அதிகரித்து வரும் நிலையில், சக்திமிக்க போராட்டங்கள் அவசியம் என்பதை கவனத்தில் கொண்டு பிப்ரவரி 12-ஆம் தேதி திருப்பூா் மாவட்டத்தில் வேலைநிறுத்தப் போராட்டத்தை முழு வெற்றி பெற செய்வதற்கான முறையில் பல்வேறு திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
முதல் கட்டமாக அனைத்துப் பிரதான சாலைகளிலும் வேலைநிறுத்தம் குறித்து சுவா் விளம்பரம் செய்வது, திருப்பூா் மாவட்டத்தை 7 மையங்களாக பிரித்து கூட்டங்கள் நடத்தி பிரசாரம் நடத்தப்படும்.
மேலும் ஜனவரி 20-ஆம் தேதி திருப்பூரில் மாவட்ட அளவிலான வேலைநிறுத்த தயாரிப்பு மாநாடு நடத்துவது எனவும், அந்த மாநாட்டில் விரிவான வேலை திட்டத்தை தயாா் செய்து அறிவித்து போராட்டக் குழுவை அமைப்பது எனவும், சங்கங்களின் துறைவாரியான கூட்டங்களை நடத்துவது எனவும் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
