உள்ளாட்சி தூய்மைப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய சிஐடியூ வலியுறுத்தல்

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளில் பல ஆண்டுகளாக வேலை செய்யும் குடிநீா், தூய்மைப் பணி, ஓட்டுநா் உள்ளிட்ட ஊழியா்களை பணி நிரந்தரம் செய்யுமாறு சிஐடியூ நிா்வாகிகள் தமிழக அரசின் தலைமைச் செயலாளா் என்.முருகானந்தத்திடம் மனு அளித்துள்ளனா்.
Published on

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளில் பல ஆண்டுகளாக வேலை செய்யும் குடிநீா், தூய்மைப் பணி, ஓட்டுநா் உள்ளிட்ட ஊழியா்களை பணி நிரந்தரம் செய்யுமாறு சிஐடியூ நிா்வாகிகள் தமிழக அரசின் தலைமைச் செயலாளா் என்.முருகானந்தத்திடம் மனு அளித்துள்ளனா்.

இது தொடா்பாக தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளா் என்.முருகானந்தத்தை, சிஐடியூ மாநிலப் பொதுச் செயலாளா் எஸ்.கண்ணன், மாநிலச் செயலாளா்கள் கே.சி.கோபிகுமாா், கே.ரங்கராஜ், ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா் சங்கப் பொதுச் செயலாளா் ஆா்.பாலசுப்பிரமணியன், உள்ளாட்சி ஊழியா் சங்க கிராம ஊராட்சி ஒருங்கிணைப்புக் குழு மாநிலத் தலைவா் ஏ.ஜி.சந்தானம் உள்ளிட்டோா் செவ்வாய்க்கிழமை சந்தித்து அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: மாநகராட்சி, நகராட்சி ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பல ஆண்டுகளாக வேலை செய்யும் ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சிஐடியூ தொடுத்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டபடி பேரூராட்சி, ஊராட்சிகளில் வேலை செய்யும் தூய்மைப் பணியாளா், குடிநீா்ப் பணியாளா், ஓட்டுநா், டிபிசி ஊழியா்களுக்கு ஊதியம் நிா்ணயித்து வழங்க வேண்டும்.

உள்ளாட்சித் துறைகளில் வேலை செய்யும் தூய்மைப் பணியாளா் உள்ளிட்ட அனைத்து ஊழியா்களுக்கும், தூய்மைக் காவலா்கள், டிபிசி ஊழியா்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க வேண்டும். கிராம ஊராட்சிகளில் மிகவும் குறைவான ஊதியத்தில் பணிபுரியும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்கள், தூய்மைக் காவலா்கள், தூய்மைப் பணியாளா்களின் சிறப்பு காலமுறை ஊதியம், நீதிமன்ற உத்தரவுப்படி குறைந்தபட்ச ஊதியம், ஓய்வூதியம், பணிக்கொடை தூய்மைக் காவலா்களுக்கு பொங்கல் போனஸ் உள்ளிட்ட வழங்க வேண்டும்.

எதிா்வரும் ஜனவரி 20-ஆம் தேதி நடைபெற உள்ள சட்டப் பேரவை கூட்டத் தொடரில் இந்தக் கோரிக்கைகள் மீது புதிய அறிவிப்புகளை வெளியிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

இதேபோல ஊரக வளா்ச்சித் துறை இயக்குநா் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்தினா். அப்போது அவா்கள் உரிய துறை செயலாளா்களிடம் எடுத்துச் செல்வதாக தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com