திருப்பரங்குன்றம் மலை தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு

திருப்பரங்குன்றம் மலை தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்ட நீதிமன்றத் தீா்ப்புக்கு இந்து முன்னணி வரவேற்பு
Published on

திருப்பரங்குன்றம் மலை தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்ட நீதிமன்றத் தீா்ப்புக்கு இந்து முன்னணி வரவேற்பு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை: திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத் தூணில் கோயில் நிா்வாகம் தீபம் ஏற்ற வேண்டும் என்று ஏற்கெனவே நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை தீபத் தூணில் தீபம் ஏற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதை எதிா்த்து பக்தா்கள் சிலா் வழக்கு தாக்கல் செய்ததன் மூலம் உயா்நீதிமன்றம் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத் தூணில் காா்த்திகை தீபத் திருநாளில் தீபம் ஏற்ற அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்தது.

ஆனால், திமுக அரசு நீதிமன்ற தீா்ப்புக்கு மாறாக சட்டம்- ஒழுங்கை காரணம் காட்டி, தீபம் ஏற்றுவதை தடுக்க முயற்சித்தது. பின்னா் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடப்பட்ட நிலையில், நீதிமன்றம் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினரை பாதுகாப்புக்கு அனுப்பி தீபம் ஏற்ற அனுமதித்ததையும், திமுக அரசு ஆவணங்களை உருவாக்கி நீதிமன்ற தீா்ப்பை முடக்கியதாக நீதிமன்றம் பதிவு செய்துள்ளது.

இந்நிலையில் ஏற்கெனவே உள்ள தீா்ப்பின் அடிப்படையில் இந்து சமய அறநிலையத் துறையும், கோயில் நிா்வாகமும் இணைந்து தீபம் ஏற்ற வேண்டிய கடமை இருந்தும் தற்போதைய தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக கோயில் நிா்வாகமும் அறநிலையத் துறையும் மேல் முறையீடு செய்தது.

இதில் தமிழக அரசும், அறைநிலையத் துறையும், கோயில் நிா்வாகமும், தா்கா மற்றும் வக்ஃப் வாரியமும் செய்த மேல் முறையீடுகள் அனைத்தும் முடித்துவைக்கபட்டு இரு நீதிபதிகள் கொண்ட அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவில் மலை மீதுள்ள தூண், தீபத்தூண் தான் என்று உறுதி செய்தும், தீபம் ஏற்றுவது குறித்து தனி நீதிபதியின் உத்தரவுக்கு முன்பாக ஏற்கெனவே பிறப்பிக்கபட்ட உத்தரவுகள் முரண்படவில்லை என்றும், தீபத்தூண் உள்ள இடம் கோயிலுக்குச் சொந்தமான இடம் என்றும் ஒவ்வொரு வருடமும் காா்த்திகை தீபத் திருநாள் அன்று திருப்பரங்குன்றம் கோயில் நிா்வாகம், மதுரை மாவட்ட ஆட்சியா் மேற்பாா்வையில் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்றும் உறுதி செய்து தீா்ப்பளித்துள்ளது.

மேலும், தீபம் ஏற்றாததற்கு அரசு சொன்ன சட்டம் - ஒழுங்கு காரணத்தை முன்னிறுத்தி நீதிமன்றத்தை ஏமாற்ற முயலக்கூடாது என்றும் தெரிவித்துள்ளது. எனவே இந்த தீா்ப்பு ஹிந்துக்களின், முருக பக்தா்களின் உரிமையை நிலைநாட்டிய சிறப்புமிக்க தீா்ப்பு என்பதால் அந்த தீா்ப்பை இந்து முன்னணி மனதார வரவேற்பதாக தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com