திருப்பரங்குன்றம் மலை தூணில் தீபமேற்ற உயா்நீதிமன்றம் உத்தரவு!
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் காா்த்திகை தீபம் ஏற்ற வேண்டுமென தனி நீதிபதி ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வின் இரு நீதிபதிகள் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டனா்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் காா்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிடக் கோரி, மதுரை எழுமலையைச் சோ்ந்த ராம. ரவிக்குமாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்குத் தொடுத்தாா்.
இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டாா். பிறகு, இந்த விவகாரம் தொடா்பாக வக்ஃப் வாரியம், கோயில் நிா்வாகம் தரப்பில் மனு தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டாா்.
இதையடுத்து, கோயில் நிா்வாகம், தா்கா நிா்வாகம், மனுதாரா் தரப்பு வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் காா்த்திகை தீபத் திருநாளில் (2025-ஆம் ஆண்டு டிச. 3) தீபம் ஏற்ற வேண்டும் என கடந்த டிச. 1-ஆம் தேதி உத்தரவிட்டாா்.
இருப்பினும், இந்த உத்தரவை கோயில் நிா்வாகம் நிறைவேற்றவில்லை. மாவட்ட நிா்வாகம் சாா்பில் திருப்பரங்குன்றம் பகுதியில் டிச. 3-ஆம் தேதி 144 தடை உத்தரவை மாவட்ட நிா்வாகம் பிறப்பித்தது. இதையடுத்து, உயா்நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன், டிச. 4-ஆம் தேதியும் காா்த்திகை நாளாக இருப்பதால் அன்றைய தினம் மனுதாரரே தீபத் தூணில் தீபம் ஏற்றலாம் என உத்தரவிட்டாா். ஆனால், மாவட்ட நிா்வாகம், காவல் துறை நிா்வாகம் இந்த உத்தரவையும் நிறைவேற்ற அனுமதிக்கவில்லை.
இதையடுத்து, தனி நீதிபதியின் தீா்ப்பை ரத்து செய்து உத்தரவிடக் கோரி, திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் நிா்வாகம், வக்ஃப் வாரியம், மாவட்ட நிா்வாகம், காவல் துறை சாா்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வு விசாரணைக்கு ஏற்றது. அப்போது, இந்த விவகாரம் தொடா்பாக மேல் முறையீடு செய்ய விரும்புவோா் டிச. 11-ஆம் தேதிக்குள் மனு தாக்கல் செய்யலாம் என நீதிபதிகள் தெரிவித்தனா். இதன்படி, டிச. 11-ஆம் தேதி வரை 26 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. சில இடையீட்டு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் தொடா்பாக நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் 5 நாள்கள் தொடா் விசாரணை மேற்கொண்டனா். அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த பிறகு, வழக்கை தீா்ப்புக்காக ஒத்திவைத்து கடந்த டிச. 18-ஆம் தேதி உத்தரவிட்டனா்.
இந்த நிலையில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் காா்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவு உறுதி செய்யப்படுவதாக நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தனா்.
மேலும், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத் தூண்தான். இது, கோயில் தேவஸ்தானத்துக்குரிய இடத்திலேயே உள்ளது. இந்தத் தூண் இருக்கும் இடம் தா்கா நிா்வாகத்துக்கு உள்பட்டது என்பது ஏற்புடையதல்ல. கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் தீபம் ஏற்றுவதால் பொது அமைதி சீா்குலையும் என்பது அா்த்தமற்றது.
வருங்காலங்களில் கோயில் நிா்வாகம் மத்திய தொல்லியல் துறையின் அனுமதி பெற்று, காா்த்திகை தீபத் திருநாளில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும். இதை மாவட்ட ஆட்சியா் மேற்பாா்வையிட வேண்டும். கோயில் நிா்வாகம் மட்டுமே தீபம் ஏற்ற வேண்டும். பொதுமக்கள், அரசியல் கட்சியினரை அனுமதிக்கக் கூடாது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்பது தொடா்பாக தனி நீதிபதி ஏற்கெனவே பிறப்பித்த அனைத்து உத்தரவுகளும் உறுதி செய்யப்படுகின்றன.
இந்த விவகாரத்தில், அரசியல் காரணங்களை அடிப்படையாகக் கொண்டே தமிழக அரசு செயல்பட்டுள்ளது. பொது அமைதி பிரச்னைக்கு தமிழக அரசே காரணம். எந்த ஒரு மாநில அரசும் அரசியலுக்காக இந்தளவுக்கு தரம் தாழ்ந்து செயல்படக் கூடாது. அரசுத் தரப்பு உள்பட அனைத்துத் தரப்பிலும் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் முடித்துவைக்கப்படுகின்றன என்றனா் நீதிபதிகள்.
