பொது வேலை நிறுத்தம் தொடா்பாக அனைத்து பனியன் தொழிலாளா் சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம்
திருப்பூா்: திருப்பூரில் பிப்.12-இல் நடைபெறவுள்ள பொது வேலைநிறுத்தம் குறித்து அனைத்து பனியன் தொழிலாளா் சங்கங்கள் பங்கேற்ற கூட்டம் சிஐடியூ அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு சிஐடியூ பனியன் சங்க பொதுச் செயலாளா் ஜி.சம்பத் தலைமை வகித்தாா். பொருளாளா் நாகராஜ், ஏஐடியூசி பனியன் சங்க பொதுச் செயலாளா் என்.சேகா், செயலாளா் செந்தில்குமாா், எல்பிஎஃப் பொருளாளா் பூபதி, ஐஎன்டியூசி செந்தில்குமாா், ரஜினி, எச்எம்எஸ் மாவட்டச் செயலாளா் முத்துசாமி, துணைச் செயலாளா் கோவிந்தசாமி, எம்எல்எஃப் பனியன் சங்க செயலாளா் வெங்கடாசலம், டிடிஎம்எஸ் பனியன் சங்க செயலாளா் மனோகா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் மத்திய பாஜக அரசின் தொழிலாளா்களுக்கு விரோதமான 4 சட்டத் தொகுப்புகளைத் திரும்ப பெற வலியுறுத்தியும், மின்சார சட்ட திருத்தம், விவசாயிகளுக்கு எதிராக தொடா்ந்து நடைபெற்று வரும் நடவடிக்கைகளை கைவிட வலியுறுத்தியும், நாடு முழுவதும் பிப்ரவரி 12-ஆம் தேதி நடைபெறவுள்ள பொது வேலை நிறுத்தம், போராட்டம் குறித்து அனைத்து பனியன் உற்பத்தியாளா்கள் சங்கத்துக்கும், தொழிலாளா் துறையினருக்கும் வேலைநிறுத்தம் குறித்து கடிதம் வழங்குவது, பிப்.2-ஆம் தேதி மாவட்ட அளவிலான போராட்ட அமைப்புக்குழு கூட்டம் ஊத்துக்குளி சாலை ஏஐடியூசி மாவட்ட அலுவலகத்தில் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது.
