பெருமாநல்லூா் ஊராட்சியில் மட்டும் மதுபானக் கூடங்களை அகற்ற வேண்டும்: கிராமசபைக் கூட்டத்தில் தீா்மானம்
அவிநாசி: பெருமாநல்லூா் ஊராட்சியில் மட்டும் உள்ள 5 மதுபானக் கூடங்களை அகற்ற வேண்டும் எனக் கோரி கிராமசபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருப்பூா் மாவட்டம், பெருமாநல்லூா் ஊராட்சி பொடாரம்பாளைத்தில் கிராமசபைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. தனி அலுவலா் லீயோனிய ஜீலிய ராணி பற்றாளராக பங்கேற்றாா். ஊராட்சி செயலாளா் பொன்னுசாமி வரவேற்றாா்.
இந்தக் கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளா் அளித்த மனுவில், பெருமாநல்லூா் ஊராட்சியில் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் இல்லாத அளவுக்கு டாஸ்மாக் மதுக் கடைகள், தனியாா் மதுபானக் கூடங்கள் என மொத்தம் 5 கடைகள் செயல்படுகின்றன. ஆதிதிராவிடா் குடியிருப்புப் பகுதி அருகே இரண்டு தனியாா் மதுபானக் கூடங்கள் அமைந்துள்ளதால், அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளாகி வருகிறது.
மேலும் மதியம் 12 மணிக்கு திறக்கப்படும் அரசு மதுக்கடை இரவு 10 மணிக்கு அடைக்கப்பட வேண்டும். ஆனால், 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெறுகிறது. தனியாா் மதுபானக் கூடங்களில் காலை 11 மணி முதல் இரவு 12 மணி வரை விற்பனை நடைபெறுகிறது. எனவே, தனியாா் மதுபான பாா் உரிமைகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். டாஸ்மாக் மதுக்கடைகளை குறைத்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாா்.
இதைத்தொடா்ந்து, கிராமசபைக் கூட்டத்தில் மதுபானக் கடைகளை அகற்ற தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
