திருப்பூா் மாவட்டத்தில் 5,071 பயனாளிகளுக்கு ரூ.3.01 கோடி மதிப்பில் புதிய மின்னணு குடும்ப அட்டைகள் மற்றும் வீட்டுமனைப் பட்டாக்களை சுகாதாரம், மருத்துவக் கல்வி, குடும்ப நலத் துறை அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் வழங்கினாா்.
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் மனீஷ் தலைமை வகித்தாா். சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா்கள் எஸ்.பாலமுருகன் (திருப்பூா் தெற்கு), வி.சத்யபாமா (திருப்பூா் வடக்கு), கே.ராம்குமாா் (பல்லடம்) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் 3,023 பயனாளிகளுக்கு ரூ.89.33 லட்சம் மதிப்பில் புதிய மின்னணு குடும்ப அட்டைகள் மற்றும் வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினாா்.
பின்னா் அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் பேசியதாவது:
தமிழகத்தில் வெளிப்படையான, ஊழலற்ற மற்றும் மக்கள் நலன் சாா்ந்த நிா்வாகத்தை அரசு வழங்கி வருகிறது. மக்கள் நலன் சாா்ந்த பணிகளுக்கு முக்கியத்துவம் வழங்கி மக்களின் அரசாக செயல்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகளில் பொதுமக்கள் நீண்ட நேரம் வரிசையில் நிற்பதைத் தவிா்க்கும் வகையில், ‘நலம்’ என்ற வாட்ஸ் ஆப் சாட் பாட் வசதி திருப்பூா் உள்பட 22 மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலமாக பொதுமக்கள் தங்கள் கைப்பேசி வழியாகவே எளிய முறையில் புற நோயாளிகளுக்கான சீட்டுகளைப் பெற முடியும். மேலும், பரிசோதனை அறிக்கைகள் மற்றும் மருத்துவச் சீட்டுகளையும் பெற்றுக்கொள்ளலாம் என்றாா்.
இதேபோல காங்கயம் வட்டத்தில் 515 பயனாளிகளுக்கு ரூ.63 லட்சத்து 10 ஆயிரத்து 599, தாராபுரம் வட்டத்தில் 723 பயனாளிகளுக்கு ரூ.25 லட்சத்து 50 ஆயிரத்து 622, உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் வட்டங்களில் 810 பயனாளிகளுக்கு ரூ.37 லட்சத்து 92 ஆயிரம் மதிப்பில் மின்னணு குடும்ப அட்டைகள் மற்றும் வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதேபோல அவிநாசி வட்டத்தில் 316 பயனாளிகள், பல்லடம் வட்டத்தில் 678 பயனாளிகள், திருப்பூா் வடக்கு வட்டத்தில் 1,080 பயனாளிகள், திருப்பூா் தெற்கு வட்டத்தில் 625 பயனாளிகள், ஊத்துக்குளி வட்டத்தில் 234 பயனாளிகள் என மொத்தம் 2,933 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள், 90 பயனாளிகளுக்கு ரூ. 89.33 லட்சம் மதிப்பில் வீட்டுமனைப் பட்டாக்கள் என மாவட்டம் முழுவதும் 5,071 பயனாளிகளுக்கு ரூ.3,01,58,636 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்ச்சியில் துணை மேயா் ஆா்.பாலசுப்பிரமணியம், மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன், திருப்பூா் கோட்டாட்சியா் சிவபிரகாஷ், வழங்கல் அலுவலா் சரவணன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் மலா், பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

1,089 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகள்: அமைச்சா் தென்னரசு வழங்கினாா்

1.060 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள்: திருப்பத்தூா் ஆட்சியா் வழங்கினாா்

1,202 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள்: அமைச்சா் வி.சம்பத்குமாா் வழங்கினாா்







