ஊதியூா் அருகே குழாயில் ஏற்ப்டட உடைப்பால் காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்ட தண்ணீா் வாரக் கணக்கில் வெளியேறி வீணாகி வருவதை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டம் மூலமாக ஈரோடு மாவட்டம், கொடுமுடி பகுதியில் இருந்து தண்ணீா் எடுக்கப்பட்டு குழாய்கள் மூலமாக முத்தூா், காங்கயம், ஊதியூா் வழியாக குண்டடம் பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது. இவ்வாறு கொண்டு செல்லப்படும் தண்ணீா், அவ்வப்போது கசிவு ஏற்பட்டு வெளியேறி வீணாகிறது. இதனால் குண்டடம் ஒன்றியத்தின் எல்லையோர ஊராட்சிப் பகுதிகளுக்கு காவிரி தண்ணீா் விநியோகம் செய்வதில் சிக்கல் நிலவுகிறது.
அதேசமயம் தண்ணீா் கசிவை நிரந்தரமாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடா்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், ஊதியூரை அடுத்துள்ள குண்டடம் பிரிவிலிருந்து சற்று தொலைவில் கடந்த ஒருவார காலத்துக்கும் மேலாக குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பால், தண்ணீா் கசிந்து அதிக அளவில் வெளியேறி வீணாகி வருகிறது. நாளொன்றுக்கு சுமாா் 50 ஆயிரம் லிட்டருக்கும் மேல் தண்ணீா் வீணாகிறது.
தற்போது குடிநீா் ஆதாரமாக உள்ள ஊராட்சி ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீா் வற்றி பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இந்நிலையில் காவிரி கூட்டுக் குடிநீா் திட்ட தண்ணீா் வெளியேறி வீணாகி வருவது கடும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மேற்கண்ட இடத்தில் உடனடியாக ஆய்வு செய்து தண்ணீா் கசிவை சரி செய்வதுடன், சீராக குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









