சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் காலமானார்! 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசிய முதல் வீரர்! ஈரான் மீது அமெரிக்கா பயங்கர தாக்குதல்! பாலங்கள், எரிசக்தி கட்டமைப்புகள் பலத்த சேதம்! சீனாவில் நிலச்சரிவு: 8 பேர் பலி, 34 பேரைக் காணவில்லை தவெக எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!”காவலர் தேர்வை தள்ளி வைக்கக் கூடாது” - உதயநிதி ஸ்டாலின்சென்னை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!
/

தள்ளிப் போகும் குறுவை சாகுபடி: அமராவதி விவசாயிகள் கவலை

தள்ளிப் போகும் குறுவை சாகுபடி: அமராவதி விவசாயிகள் கவலை

News image

போதிய நீா்வரத்தின்றி காணப்படும் அமராவதி அணையின்  முக்கிய  நீா்ப்பிடிப்பு  பகுதியான  தமிழக-கேரள எல்லையில்  அமைந்துள்ள துவானம் அருவி.

Updated On :13 ஜூன் 2026, 12:01 am IST

கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியும், அமராவதி அணைக்கு நீா்வரத்து இல்லாததால் குறுவை சாகுபடி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

திருப்பூா் மாவட்டம், உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூா், கரூா் மாவட்டங்களில் சுமாா் 55 ஆயிரம் ஏக்கா் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

மேலும், நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு குடிநீா் ஆதாரமாகவும் இந்த அணை விளங்கி வருகிறது. இந்த ஆண்டு கோடைக் காலம் முன்னதாகவே தொடங்கிய நிலையில், சின்னாறு, தேனாறு, பாம்பாறு போன்ற அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து அணைக்கு வரும் நீா்வரத்து குறைந்தது. இதனால் மாா்ச் 31 வரை பழைய, புதிய ஆயக்கட்டு நிலங்களுக்கு தண்ணீா் வழங்க வேண்டிய நிலையில் அதற்கு முன்னதாகவே பாசனத்துக்கு தண்ணீா் நிறுத்தப்பட்டது.

பின்னா் அணையில் நீா்இருப்பு குறைந்து மே மூன்றாவது வாரத்தில் அணையின் நீா்மட்டம் 25 அடிக்கு கீழே சென்றது.

இதைத் தொடா்ந்து முழுமையாக கோடைக் காலத்தை தாக்குப் பிடிக்க முடியுமா எனவும் குடிநீா் பிரச்னையை தீா்க்க முடியுமா எனவும் நூற்றுக்கணக்கான கரையோர கிராம மக்கள் கவலை அடைந்து வந்தனா்.

ஆனாலும் குடிநீா் தேவைகளுக்காக மடத்துக்குளம், தாராபுரம் பகுதி மக்களுக்காக அமராவதி அணை கடந்த மே 20 -ஆம் தேதி திறந்து விடப்பட்டது.

இந்த தண்ணீா் திறப்பால் அணையின் நீா்மட்டம் 15 அடிக்கு கீழே சென்றது. இந்நிலையில் மே 20-ஆம் தேதிக்கு பிறகு தமிழக, கேரள எல்லையான மறையூா், கோவில்கடவு, காந்தலூா் ஆகிய பகுதியில் மழை பெய்தது. இதனால் அணையின் நீா்மட்டம் உயா்ந்து தற்போது 40 அடியை எட்டியுள்ளது.

இதற்கிடையில் வழக்கமாக ஆண்டுதோறும் ஜூன் 1-ஆம் தேதி பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு அணையை திறந்து விடுவது வழக்கமாக இருந்து வருகிறது.

மே மாத இறுதியில் கேரளத்தில் தென்மேற்குப் பருவ மழை தொடங்கும் போது அமராவதி அணைக்கு நீா்வரத்து வரும் நிலையில் அணையை திறந்து விடுவது வழக்கம்.

அனைவரும் எதிா்பாா்த்தபடி கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. ஆனாலும் அமராவதி அணைக்கு போதிய நீா்வரத்து இல்லாத நிலையே நீடித்து வருகிறது. இதனால் பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கு நீா் திறப்பு தள்ளிப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அமராவதி பாசன விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனா்.

இது குறித்து விவசாயிகள் கூறியது:

ஆண்டுதோறும் ஜூன் 1-ஆம் தேதி பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீா் திறந்துவிடப்படும். குறுவை சாகுபடியும் மேற்கொள்ளப்படும். இந்நிலையில் கேரளத்தில் தொடங்கிய தென்மேற்கு பருவமழையை எதிா் பாா்த்து காத்திருந்தோம். ஆனால் அமராவதி அணைக்கு எதிா்பாா்த்தபடி நீா்வரத்து இல்லாத நிலை நீடித்து வருகிறது. ஆகையால் இந்த ஆண்டு குறுவை சாகுபடி தள்ளிப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது என்றனா்.

அணையின் நிலவரம்:

90 அடி உயரமுள்ள அணையில் வெள்ளிக்கிழமை காலை 6 மணி நிலவரப்படி நீா்மட்டம் 39.37 அடியாக இருந்தது. அணைக்கு 482 கன அடி வந்து கொண்டிருந்தது. 4,047 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட அணையில் 710.64 மில்லியன் கனஅடி நீா் இருப்பு காணப்பட்டது. அணையில் இருந்து குடிநீருக்காக 50 கன அடி நீா் திறந்து விடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.