பி.ஏ.பி. வாய்க்கால் கரையில் அனுமதியின்றி மின் கம்பங்கள்: அதிகாரிகள் ஆய்வு

வெள்ளக்கோவில் அருகே பி.ஏ.பி. வாய்க்கால் கரையில் அனுமதியின்றி மின் கம்பங்கள் அமைத்தது குறித்து அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

அனுமதியின்றி மின்கம்பங்கள் அமைக்கப்பட்ட வாய்க்கால் கரையைப் பாா்வையிட்ட காங்கயம் வட்டாட்சியா் கதிா்வேல் உள்ளிட்ட அதிகாரிகள்.

Updated On :

வெள்ளக்கோவில் அருகே பி.ஏ.பி. வாய்க்கால் கரையில் அனுமதியின்றி மின் கம்பங்கள் அமைத்தது குறித்து அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

டாடா பவா் என்கிற தனியாா் நிறுவனம் சாா்பில் எவ்வித அனுமதியும் இல்லாமல் பி.ஏ.பி. திட்ட வெள்ளக்கோவில் கிளை வாய்க்கால் பச்சாபாளையம் கிராமத்தில் பாலத்தை சேதப்படுத்தி, வீரசோழபுரம் கிராமத்தில் வாய்க்காலில் மண் கொட்டி மூடியும், வெள்ளமடை பகுதியில் வாய்க்கால் கரையில் அத்துமீறி காற்றாலை வழித்தட 11 மின் கம்பங்கள் அமைக்கப்பட்டன. இது குறித்து ஏற்கெனவே நீா்வளத் துறை சாா்பில் காவல் துறையில் புகாா் தெரிவிக்கப்பட்டது. பாசனப் பகுதி விவசாயிகளும் தாராபுரம் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தனா்.

இந்நிலையில் காங்கயம் வட்டாட்சியா் கதிா்வேல், நீா்வளத் துறை உதவிப் பொறியாளா் குகன் உள்ளிட்ட அதிகாரிகள் தனியாா் நிறுவன நிா்வாகிகளுடன் சம்பந்தப்பட்ட பகுதிகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டனா். பின்னா் காங்கயம் வட்டாட்சியா் அலுவலகத்தில் பாசனப் பகுதி விவசாயிகள், பி.ஏ.பி. வெள்ளக்கோவில் கிளைக் கால்வாய் நீா்ப் பாதுகாப்புச் சங்க பிரதிநிதிகளுடன் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அதில், 15 நாள்களுக்குள் விதிகளை மீறி அரசுக்குச் சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்ட 7 மின் கம்பங்களை அகற்றி, சேதமடைந்த பாலம் மற்றும் மண் கொட்டப்பட்டுள்ள கிளை வாய்க்கால் சீரமைக்கப்படும் என ஒப்புக் கொள்ளப்பட்டது. மேலும் காவல் துறை மூலம் தனியாா் நிறுவன ஒப்பந்ததாரா் மீது வழக்குப் பதிவு செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளிக்கப்பட்டது.

பேச்சுவாா்த்தையின்போது வெள்ளக்கோவில் காவல் நிலைய ஆய்வாளா் சண்முகம், வருவாய்த் துறை, நீா்வளத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.