
இந்தியா- பிரான்ஸ் புரிந்துணா்வு ஒப்பந்தத்துக்கு ஏஇபிசி வரவேற்பு
இந்திய ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகளுக்கு உலக சந்தைகளில் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் இந்தியா-பிரான்ஸ் புரிந்துணா்வு ஒப்பந்தத்துக்கு ஏஇபிசி வரவேற்பு தெரிவித்துள்ளது.

இந்தியா-பிரான்ஸ் இடையேயான புரிந்துணா்வு ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்ட ஏஇபிசி தலைவா் ஆ.சக்திவேல் மற்றும் பிரான்ஸின் பிரீமியா் விஷன் ஃபேஷன் பிரிவு தலைமைச் செயல் அலுவலா் ஃப்ளோரன்ஸ் ரூசன் உள்ளிட்டோா்.
இந்திய ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகளுக்கு உலக சந்தைகளில் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் இந்தியா-பிரான்ஸ் புரிந்துணா்வு ஒப்பந்தத்துக்கு ஏஇபிசி வரவேற்பு தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக ஏஇபிசி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
இந்திய ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைத் துறையை உயா்மதிப்பு கொண்ட சா்வதேச சந்தைகளுடன் மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்தியா-பிரான்ஸ் இடையே கையொப்பமான புரிந்துணா்வு ஒப்பந்தத்தை ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் வரவேற்றுள்ளது.
இந்த ஒப்பந்தம் பாரீஸில் செப்.2-இல் ஏஇபிசி தலைவா் ஆ.சக்திவேல் மற்றும் பிரான்ஸின் பிரீமியா் விஷன் ஃபேஷன் பிரிவு தலைமைச் செயல் அலுவலா் ஃப்ளோரன்ஸ் ரூசன் ஆகியோரால் கையொப்பமிடப்பட்டது. இந்த நிகழ்வில் இந்திய அரசின் ஜவுளி அமைச்சக செயலாளா் நீலம் ஷமி ராவ், கைத்தறித் துறை மேம்பாட்டு ஆணையா் எம். பீனா, மூத்த தொழில் துறை தலைவா்கள், வடிவமைப்பாளா்கள், ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் மற்றும் இந்திய தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
வா்த்தகம், சா்வதேச கொள்முதல், வடிவமைப்பு, நிலைத்தன்மை மற்றும் ஜவுளிப் பாரம்பரியம் உள்ளிட்ட துறைகளில் இந்தியா-பிரான்ஸ் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது இதன் நோக்கமாகும். இந்த ஒப்பந்தம் மூலம் இந்திய ஜவுளி உற்பத்தியாளா்கள், ஆயத்த ஆடை ஏற்றுமதியாளா்கள், வடிவமைப்பாளா்கள் மற்றும் கைவினைக் கலைஞா்கள், சா்வதேச வா்த்தகா்கள், முன்னணி ஃபேஷன் நிறுவனங்கள் மற்றும் பிரீமியம் கொள்முதல் வலையமைப்புகளுடன் இணைவதற்கான வாய்ப்பைப் பெறுவா்.
அளவு சாா்ந்த ஏற்றுமதியிலிருந்து உயா்மதிப்பு, வடிவமைப்பு சாா்ந்த மற்றும் பிரீமியம் ஃபேஷன் தயாரிப்புகளை நோக்கி இந்திய ஏற்றுமதியை நகா்த்துவது இதன் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






