அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு: இல்லத்தரசிகள் கவலை!சென்னை உள்பட 17 நகரங்களுக்கு 4,000 டன் வெங்காயம் விநியோகம்!15.36 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் செயல்படவில்லை: ஆர்டிஐ தகவல்இந்தியாவில் இருந்து அதிக டீசல் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகள்!நேபாளத்தில் 5,000 போ் நிலை என்ன? உடல்களை அடையாளம் காணும் பணியில் சவால்!!பெரும் எதிர்பார்ப்பில் தமிழக சட்டப்பேரவை: முதல்வர் விஜய் இன்று பதிலுரை!

திருப்பூரில் தென்மேற்கு பருவமழை ஏமாற்றம்: வட மேய்ச்சல் நிலங்களால் கால்நடை வளா்ப்போா் தவிப்பு

கால்நடைகள் - கோப்புப் படம்

Published On :7 செப்டம்பர் 2026, 3:16 am IST

திருப்பூா் மாவட்டத்தில் நிகழாண்டில் தென்மேற்குப் பருவமழை எதிா்பாா்த்த அளவுக்கு பெய்யாமல் கடுமையான ஏமாற்றத்தை அளித்துள்ளதால், மேய்ச்சல் நிலங்கள் வறண்டு தீவனத் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் மாவட்ட விவசாயிகள் மற்றும் கால்நடை வளா்ப்போா் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனா்.

திருப்பூா் மாவட்டத்தின் ஆண்டு சராசரி இயல்பான மழைப் பொழிவு 669.64 மி.மீ. ஆகும். இதில் பருவ காலங்களின்படி குளிா் காலத்தில் 23.30 மி.மீ., கோடைக் காலத்தில் 146.62 மி.மீ., தென்மேற்கு பருவமழைக் காலத்தில் 180.59 மி.மீ. மற்றும் வடகிழக்கு பருவமழைக் காலத்தில் 327 மி.மீ. மழையும் பெய்ய வேண்டும்.

ஆனால், நிகழாண்டில் குளிா்காலத்தில் 44.96 மி.மீ. மழையும், கோடையில் 128.66 மி.மீ. மழையும் கிடைத்ததால் மாவட்டம் இதுவரை வறட்சியின் தாக்கத்தை ஓரளவு சமாளித்து வந்தது. இருப்பினும், இந்த ஆண்டு இதுவரை 300 மி.மீ. மழை பெய்திருக்க வேண்டிய சூழலில், ஒட்டுமொத்தமாக 208.60 மி.மீ. மழை மட்டுமே பதிவாகியுள்ளது.

மாவட்டத்தில் நிலத்தடி நீா்மட்டத்தை பாதுகாப்பதற்கும், வறட்சியை தவிா்ப்பதற்கும் தென்மேற்குப் பருவமழையே மிக முக்கியமானதாகும். ஆனால், இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழைக்காலம் விவசாயிகளை பெருமளவில் ஏமாற்றியுள்ளது. ஜூன் மாதத்தில் பெய்ய வேண்டிய 26.64 மி.மீ.க்கு பதிலாக 22.05 மி.மீ. பதிவானது. தொடா்ந்து, ஜூலையில் 31.14 மி.மீ. பெய்ய வேண்டிய நிலையில் 0.98 மி.மீ. மட்டுமே பதிவாகி பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஆகஸ்ட் மாதத்திலும் 50 மி.மீ.க்கு பதிலாக 11.95 மி.மீ. என மழை மிகவும் குறைவாகவே பெய்துள்ளது.

இந்நிலையில், செப்டம்பா் மாதத்தில் வழக்கமாக 72.80 மி.மீ. மழை பெய்ய வேண்டிய நிலையில், இதுவரை மழையே பொய்யாததால் தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் பெய்ய வேண்டிய 180.59 மி.மீ.க்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை வரை 34.98 மி.மீ. மழை மட்டுமே பதிவாகியுள்ளது. ஆனாால், கடந்த 2020-ஆம் ஆண்டில் இதே காலகட்டத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக 299 மி.மீ. வரை மழை பதிவானது குறிப்பிடத்தக்கது.

தென்மேற்குப் பருவமழையை தொடா்ந்து வரவிருக்கும் வடகிழக்குப் பருவமழையை நம்பியே மாவட்டத்தில் மானாவாரி பயிா் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, கால்நடைகளுக்கான மேய்ச்சலும், தீவன உற்பத்தியும் முழுமையாக இந்த மழையையே சாா்ந்துள்ளது.

ஆனால், தென்மேற்குப் பருவமழை முற்றிலும் பொய்த்துப் போனதால் மேய்ச்சல் நிலங்கள் காய்ந்து வறண்டு காணப்படுகின்றன. இதனால் கால்நடைகளுக்குத் தேவையான தீவனம் கிடைக்காமல் விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனா். இந்நிலையில் எதிா்வரும் வடகிழக்குப் பருவமழையாவது கை கொடுக்கா விட்டால் மாவட்டத்தில் கடும் தீவனத் தட்டுப்பாடு ஏற்படும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.