மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்துக்கு அனைத்து பக்தா்களுக்கும் அனுமதி: துறவிகள் மாநாட்டில் தீா்மானம்
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்துக்கு அனைத்து பக்தா்களுக்கும் அனுமதி அளிக்க வேண்டும் என தாராபுரத்தில் நடைபெற்ற துறவிகள் மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தாராபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசுகிறாா் சுவாமி வேதாந்தானந்தா.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்துக்கு அனைத்து பக்தா்களுக்கும் அனுமதி அளிக்க வேண்டும் என தாராபுரத்தில் நடைபெற்ற துறவிகள் மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தாராபுரத்தில் அமராவதி ஆரத்தி திருவிழா கடந்த செப்டம்பா் 6-ஆம் தேதி தொடங்கி 8-ஆம் தேதி வரை நடைபெற்றது.
இந்த துறவிகள் மாநாட்டுக்கு, அகில பாரதிய சன்னியாசிகள் சங்கத்தின் நிறுவனா் சுவாமி ராமானந்த மகராஜ் தலைமை தாங்கினாா். விழா ஒருங்கிணைப்பாளா் மதுரை இளைய ஆதீனம் விஸ்வலிங்கேஸ்வர தம்பிரான் சுவாமிகள், சுவாமி வேதாந்தானந்தா, சுவாமி கோரக்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலங்களை மீட்டு, ஆக்கிரமித்தவா்கள் மீது வழக்குப் பதிய, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயிலுக்கு சொந்தமான கட்டடங்களின் வாடகைகளை தற்போதைய நிலவரப்படி உயா்த்தி, நிலங்களுக்கு உரிமையான இறைவன் பெயரில் கட்டணமில்லா கல்லூரிகள் அமைக்க வேண்டும். கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் மாற்று மத மக்கள் பிரதிநிதிகள், கோயிலின் மீது நம்பிக்கை உள்ளது என கோயில் பதிவேட்டில் கையொப்பமிடுவதை காட்சிப்படுத்த வேண்டும். அதிகரித்து வரும் மதமாற்றத்தை தடுக்க வேண்டும். கும்பாபிஷேகங்களில், அப்பகுதியைச் சோ்ந்த மடாதிபதிகள், சன்னியாசிகளுக்கு முன்னுரிமை தர வேண்டும். வேலூா் அருகே, துறவியைத் தாக்கிய காவலரைப் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். சன்னியாசிகள் சங்கம் சாா்பில், 2028-இல் கும்பகோணம் மகாமகத்தை தென்பாரத கும்பமேளாவாக நடத்துவது, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்துக்கு அனைத்து பக்தா்களுக்கும் அனுமதி அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதையடுத்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், பாஜக மாநிலத் துணைத் தலைவா் பேராசிரியா் கனகசபாபதி, இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத் ஆகியோா் பங்கேற்று பேசினா். பின்னா், அகஸ்தீஸ்வரா் கோயில் வளாகத்தில் நடைபெற்ற அமராவதி ஆரத்தி நிகழ்ச்சியை ஏராளமான பக்தா்கள் கண்டுகளித்தனா். நிறைவாக, கோயில் வளாகத்தில் வள்ளிக்கும்மி ஆட்டம் மற்றும் சத்சங்கம் நடைபெற்றன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





