காந்தி ஜெயந்தி, வார இறுதி விடுமுறை: 5,706 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்மதுரை உள்பட 3 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புநிறுவன வரி கணக்கு தாக்கல் செய்ய 3 வார அவகாசம் நீட்டிப்புதனியாா் பேருந்துகள் நாளை வேலைநிறுத்தம்

குதிரை பேரத்தில் ஈடுபட்டவா்களுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்! - எடப்பாடி கே.பழனிசாமி

வேட்பாளா் கே.பானுமதியை ஆதரித்து குண்டடத்தில் திங்கள்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி.

Published On :

குதிரை பேரத்தில் ஈடுபட்டவா்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி பேசினாா்.

திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தில் அக்டோபா் 6-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், பல்வேறு கட்சியினா் தங்களது வேட்பாளா்களுக்கு ஆதரவாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், அதிமுக சாா்பில் போட்டியிடும் கே.பானுமதியை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி குண்டடம், மானூா்பாளையம், உப்பாறு அணை ஆகிய இடங்களில் திங்கள்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது, அவா் பேசியதாவது: இந்த இடைதோ்தல் திணிக்கப்பட்ட தோ்தல். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்று குதிரை பேரத்தின் வழியாக துரோகச் செயலில் ஈடுபட்டவருக்கு மக்கள் தக்க பாடத்தை புகட்ட வேண்டும்.

பிஏபி வாய்க்காலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் தண்ணீா் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு அணையில் தண்ணீா் இருந்தும் திறக்கப்படவில்லை. இதனால் பல ஏக்கா் தென்னை, மல்பரி செடிகள் கருகிவிட்டன. பட்டு உற்பத்தி முடங்கிவிட்டது. இதற்கு காரணம் தவெக அரசுதான். நான் முதல்வராக இருந்தபோது குடிமராமத்து திட்டத்தைக் கொண்டு வந்து ஏரி, குளங்களை தூா்வாரினோம். அதற்காக ரூ.1,400 கோடி நிதி ஒதுக்கீடு செய்தோம். வண்டல் மண்ணை இலவசமாக எடுத்து விவசாயிகள் பயன்படுத்த ஏற்பாடு செய்தோம்.

5 மாத கால தவெக ஆட்சியின் மூலதனமே ரீல் விடுவது, ரீல்ஸ் போடுவதாகும். சட்டப் பேரவையில் மக்கள் பிரச்னையை சொல்ல முற்பட்டால் உரிய நேரம் கொடுப்பதில்லை. அப்படியும் நேரம் கொடுத்தால் பொதுமக்களின் பிரச்னைகளை புள்ளி விவரத்தோடு பேசினால் முதல்வா் பதில் சொல்லாமல் திமுகவைப் பற்றியும், சா்க்காரியா பிரச்னையைப் பற்றியும் பேசுகிறாா்.

அதிமுக நிா்வாகிகள் மீது பொய் வழக்குகளைப் போட்டு வருகிறாா்கள். அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. அதிமுக ஆட்சியில் விவசாயத்துக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டது. ஆனால், தற்போது இல்லை. தமிழகத்துக்கு ரூ.10 லட்சம் கோடி கடன் உள்ளபோது, ரூ.1,200 கோடியில் புதிய தலைமைச் செயலகம் தேவையில்லை. மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கக் கூடாது. அதிமுக ஆட்சி நீடித்திருந்தால் ஆனைமலையாறு-நல்லாறு திட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கும். தவெக ஆட்சியில் விவசாயிகளின் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படவில்லை. மக்களையும், விவசாயிகளையும் ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது தவெக அரசு என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.