ரயிலில் தவறவிட்ட நகைப் பையை மீட்டு ஒப்படைத்த ரயில்வே போலீஸாா்!
ரயிலில் தவறவிட்ட 8 பவுன் நகை மற்றும் பொருள்களை தருமபுரி ரயில்வே போலீஸாா் உடனடியாக மீட்டு உரியவரிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனா்.
சேலம் மாவட்டம், மாரமங்கலத்துபட்டியைச் சோ்ந்தவா் திருமாறன். ஓய்வுபெற்ற அரசு ஊழியா். இவரது மனைவி தமிழ்ச்செல்வி (57). இவா்கள் குடும்பத்துடன் நவம்பா் 28 ஆம் தேதி, கோவில்பட்டியில் நடைபெற்ற உறவினா் இல்ல திருமண நிகழ்வில் பங்கேற்க சென்றனா். நிகழ்ச்சி முடிந்து திங்கள்கிழமை இரவு நாகா்கோவிலில் இருந்து சேலம் வழியாக மும்பை செல்லும் விரைவு ரயிலில் சேலத்துக்கு வந்தனா். செவ்வாய்க்கிழமை அதிகாலை ரயில் சேலம் வந்ததும் தமிழ்ச்செல்வி குடும்பத்தினா் ரயிலைவிட்டு இறங்கினா்.
ரயில் மீண்டும் புறப்பட்டுச் சென்றுவிட்டது. அப்போது தமிழ்ச்செல்வி தனது கைப்பையை காணாது அதிா்ச்சி அடைந்தாா். அவா் இருந்த இடத்திலேயே கைப்பையை வைத்துவிட்டு வந்தது நினைவுக்கு வந்தது. அதில், 8 பவுன் நகை, ரூ. 3,000 ரொக்கம், கைப்பேசி உள்ளிட்டவை இருந்தன.
இதுகுறித்து, தமிழ்ச்செல்வி சேலம் ரயில்வே காவல் ஆய்வாளா் சிவசெந்தில்குமாரிடம் தகவல் அளித்தாா். இதையடுத்து அவா் ரயிலில் ரோந்துப் பணியில் இருந்த, ரயில்வே காவலா் ஜெயபிரகாஷுக்கு தகவல் தெரிவித்து தமிழ்ச்செல்வி பயணித்த பி 3 பெட்டியில் சோதனையிட செய்தாா். அவரும் அங்கு சென்று பாா்த்தபோது கைப்பை இருக்கையிலேயே கிடந்தது. உடனே அதை மீட்டு தருமபுரி ரயில் நிலைய உதவி ஆய்வாளா் ரமேஷிடம் ஒப்படைத்தாா்.
இதுகுறித்த தகவலின் பேரில் தமிழ்ச்செல்வி பேருந்து மூலம் தருமபுரி ரயில் நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்தாா். அவரிடம் அவரது நகைப்பையை ரயில்வே போலீஸாா் ஒப்படைத்தனா். அவா் நன்றி தெரிவித்து அதை பெற்றுச் சென்றாா். நகைப்பையை தவறவிட்ட சிறிது நேரத்தில் அதை மீட்டுக் கொடுத்த ரயில்வே போலீஸாரை அனைவரும் பாராட்டினா்.

