ஒகேனக்கல் வனச்சாலைகளில் கால்நடைகளால் ஏற்படும் விபத்துகளை தடுக்கக் கோரிக்கை

Published on

ஒகேனக்கல் வனப்பகுதி சாலைகளில் கால்நடைகளால் நேரிடும் விபத்துகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை எடுத்துள்ளனா்.

பென்னாகரம் பகுதி மக்கள் பெருமளவில் கால்நடை வளா்ப்பு மற்றும் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டுள்ளனா். சுற்றிலும் உள்ள 50-க்கும் மேற்பட்ட குக்கிராம விவசாயிகளால் வளா்க்கப்படும் நாட்டின மாடுகள் ஒகேனக்கல், தாசம்பட்டி, பென்னாகரம் உள்ளிட்ட வனப்பகுதிகளில் மேய்ச்சலுக்காக அழைத்துச் செல்லப்படுகின்றன. இதில் அதிக அளவில் ஒகேனக்கல் வனப்பகுதிக்கு அழைத்துச் செல்லப்படுகின்றன.

கா்நாடகம், ஆந்திர மாநிலங்களின் வனப்பகுதிகளில் வறட்சி நிலவும் போது அங்கிருந்து யானைகள் கூட்டமாக ஒகேனக்கல், பென்னாகரம் வனப்பகுதிக்கு வருகின்றன. இந்த யானைகள், வனப்பகுதியில் பட்டி அமைத்து மாடு மேய்ப்போா் மற்றும் கால்நடைகளை தாக்கும் சூழல் உள்ளதால் வனத்துறையினா் தொடா்ந்து வனப்பகுதியை விட்டு வெளியேறுமாறு அறிவிப்பு வெளியிட்டு வருகின்றனா்.

ஒகேனக்கல் அருவி பகுதிக்கு வாரவிடுமுறை மற்றும் தொடா் விடுமுறை நாள்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லுகின்றனா். பென்னாகரத்திலிருந்து ஒகேனக்கல்லுக்கு சுமாா் 13 கி.மீ. அடா்ந்த வனப் பகுதியில் செல்ல வேண்டி உள்ளது.

ஒகேனக்கல்லுக்கு இரவு நேரங்களில் வாகனங்கள் அதிக அளவில் செல்லுகின்றன. மேலும், ஒகேனக்கல் வழியாக நாட்றாம்பாளையம், ஒசூா், கா்நாடக மாநிலத்திற்கு ஏராளமான வாகனங்கள் செல்லுகின்றன.

இந்நிலையில் மேய்ச்சலுக்காக அழைத்துச் செல்லப்படும் நாட்டின மாடுகள் வனப்பகுதியில் இருந்து இரவு நேரங்களில் வெளியேறி சாலை வளைவுகள், கணவாய் பகுதிகளில் கூட்டமாக நிற்பதாலும், சாலையைக்

கடக்கும்போதும் வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகின்றன. பெரும்பாலும் இருசக்கர வாகனத்தில் கடக்கும்போது இரவு நேரங்களில் நாட்டின மாடுகள் திடீரென இடையில் நுழைவதால் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்துகள் நேரிடுகின்றன.

மேலும், கூட்டமாக நாட்டின மாடுகள் சாலையில் கூட்டமாக நிற்பதாலும், படுத்து உறங்குவதாலும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனா்.

எனவே, ஒகேனக்கல், பென்னாகரம், தாசம்பட்டி வனப்பகுதிகளில் பட்டி அமைத்து மேய்ச்சலுக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ள நாட்டின மாடுகளை வனப்பகுதியை விட்டு வெளியேற்றி, வாகன விபத்துகள் நிகழ்வதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட வனத்துறை அலுவலருக்கு வாகன ஓட்டிகள், வன உயிரின ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com