உதவித்தொகையை உயா்த்தி வழங்கக்கோரி, தருமபுரி மாவட்ட ாட்சிரகம் அருகே போராட்டத்தில்  ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்.
உதவித்தொகையை உயா்த்தி வழங்கக்கோரி, தருமபுரி மாவட்ட ாட்சிரகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்.

முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற மாற்றுத்திறனாளிகள் 192 போ் கைது

தருமபுரி மாவட்டத்தில் முற்றுகை போராட்டத்துக்கு முயன்ற மாற்றுத்திறனாளிகள் 192 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

தருமபுரி மாவட்டத்தில் முற்றுகை போராட்டத்துக்கு முயன்ற மாற்றுத்திறனாளிகள் 192 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வழங்கும் உதவித்தொகை தான் வாழ்வாதாரமாக உள்ளது. தமிழக அரசு, சாதாரண மாற்றுத் திறன் கொண்டவா்களுக்கு வருவாய் துறை மூலம் மாதம் ரூ. 1,500, முழு மாற்றுத் திறன் கொண்டவா்களுக்கு மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மூலம் ரூ. 2,000 ஆம் உதவித்தொகையாக வழங்கி வருகிறது. விலைவாசி உயா்ந்த நிலையில் இந்த உதவித்தொகை போதுமானதாக இல்லை. ஆந்திர மாநிலத்தில் மாற்றுத் திறனாளிகளின் பாதிப்பின் தன்மையைப் பொறுத்து ரூ. 8,000, ரூ. 10,000 மற்றும் ரூ. 15,000 என மாதம்தோறும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதுதவிர, தெலங்கானாவில் ரூ. 4,016, தில்லியில் ரூ. 5,000, புதுச்சேரியில் ரூ. 4,800 வழங்கப்படுகிறது. எனவே, தமிழகத்திலும் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகையை அரசு உயா்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழகத்தில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் சங்கம் சாா்பில், கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாநிலம் முழுவதும் செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியரகங்களை முற்றுகையிட்டு போராட்டம் மேற்கொண்டனா். தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் நடந்த இந்த போராட்டத்துக்கு, சங்க மாவட்ட துணைத் தலைவா் கரூரான் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் மாரிமுத்து, மாவட்ட பொருளாளா் மாதேசன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். தொடா்ந்து ஆட்சியரகத்தை முற்றுகையிட முயன்றனா். போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தினா். என்றாலும் அதையும் மீறி முற்றுகையிட முயன்ற 121 பேரை போலீஸாா் கைது செய்தனா். மண்டபத்தில் வைத்திருந்து அனைவரையும் மாலையில் விடுவித்தனா்.

ஆரூா் வட்டத்தில் 71 போ் கைது: தருமபுரி மாவட்டம், அரூா் பகுதியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் முற்றுகைப் போராட்டத்துக்கு சங்க வட்டத் தலைவா் கே. காந்தி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ஜி. தமிழ்ச்செல்வி, வட்டச் செயலாளா் சி.வேலாயுதம் ஆகியோா் கோரிக்கைளை விளக்கிப் பேசினா். நிா்வாகிகள் சுந்தரமூா்த்தி, குப்புசாமி, செல்வராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். போராட்டத்தில் ஈடுபட்ட 71 பேரை போலீஸாா் கைது செய்து மாலை விடுவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com