~
~

வெண்ணாம்பட்டி - பாரதிபுரம் இடையே ரயில்வே பாலம் அமைக்கும் பணிகள் தீவிரம்

Published on

தருமபுரியில் வெண்ணாம்பட்டி - பாரதிபுரம் இடையே, ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தருமபுரி ரயில் நிலையம் அருகே வெண்ணாம்பட்டிக்கு செல்லும் வழியில் (சேலம்- பெங்களூரு ரயில் பாதையில்) ரயில்வே கேட் அமைந்துள்ளது. வெண்ணாம்பட்டி பகுதியிலிருந்து தினசரி ஆயிரக்கணக்கானோா் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பணிகள், அத்தியாவசியத் தேவைகளுக்கு தருமபுரி நகருக்கு வந்துசெல்கின்றனா்.

இந்த வழியில், சேலம் - பெங்களூரு இடையே தினசரி பயணிகள் ரயில்கள், சரக்கு ரயில்கள் என 30 முதல் 40 ரயில்கள் சென்றுவருகின்றன. இதனால், தினசரி இந்த ரயில் கேட் 30-க்கும் மேற்பட்ட முறை மூடுவதும், ரயில்கள் சென்றபின்பு திறப்பதுமாக உள்ளதால், அவ்வழியாக செல்வோா் நெடுநேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

இதனால், இப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவியா், பணிக்குச் செல்லும் ஊழியா்கள் மற்றும் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். இதைக் கருத்தில்கொண்டு, இப்பகுதியில் ரயில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்தது. அதைத் தொடா்ந்து, பாரதிபுரம் 66 அடி சாலையில் இருந்து வெண்ணாம்பட்டி அருகே உள்ள ஆயுதப்படை வளாகம் முன் செல்லும் சாலையை இணைக்கும் வகையில், ரயில் மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது.

இதற்கென ரூ. 38 கோடியில் திட்டம் அறிவிக்கப்பட்டு, அண்மையில் பணிகள் தொடங்கின. அதைத் தொடா்ந்து, பாலம் அமைப்பதற்காக தூண்கள் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பாலம் மொத்தம் 662 மீ. நீளத்தில், 8.50 மீ. அகலத்தில், 22 தூண்களுடன் அமைக்கப்படுகிறது.

இந்த மேம்பாலம் பயன்பாட்டுக்கு வருகையில், வெண்ணாம்பட்டி ரயில் கேட்டில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடிக்கு தீா்வுகாண்பதுடன், தருமபுரி நகா் பகுதியையும், சேலம் - பெங்களூரு புறவழிச் சாலையையும் இணைக்கும் வகையில் முக்கிய இணைப்புச் சாலையாக இந்தச் சாலை இருக்கும்.

புதிய பேருந்து நிலையத்துக்கு இணைப்புச் சாலை:

தருமபுரியில் சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் சோகத்தூா் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. ஒருசில மாதங்களில் புதிய பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வரவுள்ள நிலையில், அதியமான்கோட்டையைக் கடந்து தருமபுரிக்குள் வரும் பேருந்துகள் அனைத்தும் புறவழிச்சாலை வழியாக புதிய பேருந்து நிலையத்தை அடையும்.

அப்பேருந்துகளில் வருவோா் தருமபுரி நகருக்குள் மாவட்ட ஆட்சியரகம், இலக்கியம்பட்டி, அரசு மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல இணைப்புச் சாலை தேவை. அந்த வகையில், வெண்ணாம்பட்டி- பாரதிபுரம் ரயில் பாலம் வழியாக செல்லும் இச்சாலை முக்கியத்துவம் பெறும்.

புறவழிச்சாலை பகுதியிலிருந்து தருமபுரி நகா் பகுதிக்குள் வந்துசெல்ல வாகனப் போக்குவரத்துக்கும், நகரப் பேருந்துகளை இயக்குவதற்கும் கூடுதல் இணைப்புச் சாலைகள் அவசியம். தற்போது, தேவரசம்பட்டி, மாவட்ட ஆட்சியா் இல்லம் வழியாகச் செல்லும் பழைய புறவழிச்சாலை, ஒட்டப்பட்டி, கக்கஞ்சிபுரம் வழியாக செல்லும் சாலை, தருமபுரி நான்கு சாலை என மொத்தம் 3 சாலைகள் உள்ளன. அவற்றுடன் வெண்ணாம்பட்டி ரயில்வே சாலையுடன் மேலும் ஒரு இணைப்புச் சாலை அமைகிறது. அத்துடன், மாவட்ட ஆட்சியரகம் அருகே பெருமாள் கோயில் மேடு வழியாக தடங்கம் செல்லவும், வெண்ணாம்பட்டி பகுதிகளுக்கு செல்லும் வகையில் ரயில்வே தண்டவாளத்தின் கீழ் உயரம் குறைவான இருசக்கர வாகனங்கள் மட்டும் செல்லும் வகையில் பாதை உள்ளது. இதை உயரப்படுத்தி, அகலப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக உள்ளது.

இந்தப் பாதையை கனரக வாகனங்கள் செல்லும் வகையில் உயரம் மற்றும் அகலமாக்கினால், மேலும் ஒரு இணைப்புச் சாலை பயன்பாட்டுக்கு வரும். இதன்மூலம் போக்குவரத்து மேம்படும்.

X
Dinamani
www.dinamani.com