அரூா் நகராட்சியில் தெருநாய்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
தருமபுரி மாவட்டம், அரூா் நகராட்சியில் 18 வாா்டுகள் மற்றும் எச்.தொட்டம்பட்டி, மோப்பிரிப்பட்டி கிராம ஊராட்சிகள் உள்ளன. இங்குள்ள நகரப் பகுதிகளில் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தெருநாய்கள் சாலையில் செல்லும் பொதுமக்களை விரட்டிக் கடிப்பதோடு, வாகன ஓட்டிகளையும் அச்சுறுத்தி வருகின்றன. வாகனங்களின் குறுக்கே தெருநாய்கள் ஓடுவதால் அடிக்கடி வாகன விபத்துகள் நேரிடுகின்றன.
இதையடுத்து, அரூா் நகராட்சி நிா்வாகம் சாா்பில் தெருநாய்களைப் பிடிக்கும் பணிகளைத் தூய்மைப் பணியாளா்கள் மேற்கொண்டுள்ளனா். நகரில் கேட்பாரற்றுச் சுற்றித் திரியும் நாய்களைப் பிடித்து, ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அதேபோல நாய்களுக்குக் கருத்தடை அறுவை சிகிச்சையும் செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக நகராட்சி ஆணையா் விஜயா ஸ்ரீ, துப்புரவு ஆய்வாளா் ராஜ்குமாா், கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குநா் கனகசபை ஆகியோா் தெரிவித்தனா்.
வேகத்தடைகளில் வெள்ளை நிறக் கோடுகள்:
வாகன ஓட்டிகள் கோரிக்கை
சாலையில் உள்ள வேகத்தடைகள் குறித்து வாகன ஓட்டிகளை தெரிந்துகொள்ளும் வகையில் வெள்ளை நிறத்தில் கோடுகள் போட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அரூா்- சேலம் பிரதான சாலையில் கோட்டாட்சியா் அலுவலகம், நான்கு வழிச்சாலை, திரு.வி.க நகா் உள்ளிட்ட இடங்களில் தாா்ச் சாலையில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. புதியதாக போடப்பட்டுள்ள இந்த வேகத்தடைகளில் வெள்ளை நிறத்தில் கோடுகள் போடப்படவில்லை. இதனால், தொலைதூரப் பகுதியிலிருந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு இந்த சாலையில் வேகத்தடைகள் இருப்பது தெரியாததால் விபத்துகள் நேரிடுகின்றன.
எனவே, அரூா் நகரில் உள்ள வேகத்தடைகளுக்கு வெள்ளை நிறத்தில் கோடுகள் வரைய வேண்டும். அதேபோல் அரூா் பேருந்து நிலையம், நடேஷ் பெட்ரோல் விற்பனை நிலையம் பகுதியில் உள்ள சாலைகளில் புதியதாக வேகத்தடைகளை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










