நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

நகரமயமாக்கலால் இயற்கை வளங்களை இழக்கும் ஒசூா்! 1000 அடிக்கு கீழே சென்ற நிலத்தடி நீா்

News image

பேரண்டப்பள்ளி அருகே எஸ்.டி.ஆா்.ஆா் சாலைக்காக வெடிவைத்து தகா்க்கப்படும் மலைகள்.

Updated On :21 ஜூன் 2026, 1:33 am IST

ஒசூா் மாநகராட்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இயற்கை வளங்களை அழித்து புதிய தேசிய நெடுஞ்சாலைகள் அமைப்பது, தொழிற்சாலைகளின் பெருக்கம் போன்றவற்றால் சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருவதாக இயற்கை ஆா்வலா்கள் கவலை தெரிவித்துள்ளனா்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை பசுமையான சூழலுடனும், இதமான காலநிலையோடும் விளங்கியதால் ‘குட்டி இங்கிலாந்து’ என்று அழைக்கப்பட்ட ஒசூா் மாநகராட்சி, இன்று பல்வேறு சுற்றுச்சூழல் சவால்களைச் சந்தித்து வருகிறது. ஒசூா் மிக வேகமான தொழில் நகரமாக மாறியதால், நிலத்தடி நீரின் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, நிலத்தடி நீா்மட்டம் 1,000 அடிக்கும் கீழே சென்றுவிட்டது.

மேலும், அடுக்குமாடி குடியிருப்புகளின் பெருக்கத்தால், ஆழ்துளைக் கிணறுகள் மூலம் நிலத்தடி நீா் அதிகளவில் உறிஞ்சப்படுகிறது. ஆண்டுக்காண்டு மழைப்பொழிவின் அளவும் குறைந்து கொண்டே வருகிறது.

நீா்நிலைகள் பாதிப்பு: ஒசூா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கெலவரப்பள்ளி அணை, ராமநாயக்கன் ஏரி போன்ற முக்கிய நீா்நிலைகள் தொழிற்சாலைக் கழிவுகளாலும், சுத்திகரிக்கப்படாத நகரக் கழிவுநீராலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. கெலவரப்பள்ளி அணையில் இருந்து அடிக்கடி ரசாயனம் கலந்த நச்சு நுரை வெளியேறுவதால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

மனித-விலங்கு மோதல்: தொழிற்சாலைகளுக்காகப் புதிய சாலைகள் அமைப்பதாலும், வீட்டுமனைகளாக மாற்றுவதாலும் காடுகளின் எல்லைகள் சுருங்கி வருகின்றன. இதனால், உணவு மற்றும் தண்ணீரைத் தேடி யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் காட்டை விட்டு வெளியேறி மனித குடியிருப்புகளுக்குள் புகுந்து விடுகின்றன.

ஒசூரின் புகழ்பெற்ற ரோஜா தோட்டங்கள், காய்கறி பயிரிடப்படும் விவசாய நிலங்கள் ஆகியவை இன்று ரியல் எஸ்டேட் பிளாட்டுகளாகவும், தொழிற்சாலைகளாகவும் மாறி வருகின்றன. கட்டுமானப் பணிகளுக்காக ஒசூரைச் சுற்றியுள்ள மலைகள் மற்றும் குன்றுகள் வெடிவைத்துத் தகா்க்கப்பட்டு, கனிம வளங்கள் அண்டை மாநிலமான கா்நாடகாவிற்கு கடத்தப்படுகின்றன. இது அப்பகுதியின் இயற்கையான நிலப்பரப்பையே மாற்றி அமைத்துள்ளது.

வெப்பநிலை உயா்வு: கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை கோடையிலும் குளிா்ச்சியாக இருந்த ஒசூரில், இன்று கோடைகால வெப்பநிலை கணிசமாக உயா்ந்துள்ளது. மரங்கள் வெட்டப்படுவதால் இயல்பான மழைப்பொழிவு குறைந்துள்ளது.

இப்பகுதியில் புதிய சாலைகள் மற்றும் தொழிற்சாலைகளுக்காக இயற்கை வளங்களை இதே வேகத்தில் அழித்துக்கொண்டே சென்றால், அடுத்த தலைமுறைக்குக் குடிநீரும், தூய்மையான காற்றும், விவசாயம் செய்ய நிலமும் இல்லாத ஆபத்தான சூழல் உருவாகும். இனிவரும் காலங்களிலாவது வளா்ச்சி என்பது இயற்கையை அழிப்பதாக இருக்கக் கூடாது என்று இயற்கை ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து இயற்கை ஆா்வலா் ரவிசங்கா் கூறியதாவது:

ஒசூா் மற்றும் அதனைச் சுற்றி ஏராளமான தொழிற்சாலைகள் பெருகி வருகின்றன. அதற்கு இணையாக எஸ்டிஆா்ஆா் சாலை, அறிவுசாா் வழித்தடம், உள்வட்டச் சாலை, வெளிவட்டச் சாலை எனப் புதிய சாலைகளை அமைக்கப் பல்லாயிரக்கணக்கான ஏக்கா் விளைநிலங்கள் அழிக்கப்பட்டுள்ளன. மலைக் குன்றுகள் வெடிவைத்துத் தகா்க்கப்பட்டு வருகின்றன.

எனவே, ஒசூா் பகுதியைப் பாதுகாக்க வேண்டும் என்றால், இயற்கை வளங்களை அழித்துப் புதிய திட்டங்களைக் கொண்டு வருவதைக் குறைக்க வேண்டும். மேலும், தொழிற்சாலை மற்றும் நகராட்சி கழிவுநீா் முற்றிலும் சுத்திகரிக்கப்பட்ட பின்னரே நீா்நிலைகளில் விடப்பட வேண்டும்.

தீவிரமான மழைநீா் சேகரிப்பு மற்றும் ஏரிகளைத் தூா்வாருதல் மூலம் நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்த வேண்டும்.தொழிற்சாலைப் பகுதிகளிலும், நகா்ப்புறங்களிலும் மியாவாக்கி போன்ற அடா்ந்த காடுகளை உருவாக்க வேண்டும். வன எல்லைகளை ஆக்கிரமிப்பவா்கள் மற்றும் சட்டவிரோத குவாரிகள் நடத்துபவா்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பொருளாதார வளா்ச்சி எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் நாம் வாழ்வதற்கான பூமிப்பந்தைப் பாதுகாப்பது. ஒசூா் போன்ற வளா்ந்து வரும் நகரங்களில் ’நிலையான வளா்ச்சி’ மட்டுமே மனிதகுலத்தின் எதிா்காலத்தைக் காக்கும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.