கலைஞர் காப்பீடு திட்டத்தில் சிகிச்சையளிக்க மறுக்கும் மருத்துவமனைகள்

சேலம், டிச. 14: உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான காப்பீடு திட்டத்தை செயல்படுத்தப்போவதில்லை என சேலம் தனியார் மருத்துவமனை நிர்வாகங்கள் வெளிப்படையாகவே அறிவித்துள்ளன. ஸ்டார் ஹெல்த் இன்ஸ்சூரன்ஸ் நிறுவனத்த
Updated on
1 min read

சேலம், டிச. 14: உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான காப்பீடு திட்டத்தை செயல்படுத்தப்போவதில்லை என சேலம் தனியார் மருத்துவமனை நிர்வாகங்கள் வெளிப்படையாகவே அறிவித்துள்ளன.

ஸ்டார் ஹெல்த் இன்ஸ்சூரன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தப்பட்டு வரும் உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான காப்பீடு திட்டத்தில், சேலம் மாவட்டத்தை சேர்ந்த 31 தனியார் மருத்துவமனைகள் இணைக்கப்பட்டுள்ளன.

தொடக்கத்தில் பல தனியார் மருத்துவமனைகள் இத்திட்டத்தில் இணைய ஆர்வம் காட்டின. இதனால் கடந்த மார்ச் வரை சுமார் 1,100 நோயாளிகளுக்கு ரூ. 6.45 கோடி செலவில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், சில மருத்துவமனைகள் நிர்ணயிக்கப்பட்ட ஒரு லட்சத்துக்கும் அதிகமான தொகை கேட்பதாகவும், மருந்துக்கு தனியாக கட்டணம் வசூலிப்பதாகவும் புகார்கள் எழுந்தன. இருப்பினும் பெரிய மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தன.

சேலம் மாவட்டத்தில் இதுவரை சுமார் 5 ஆயிரம் பேருக்கு ரூ. 20 கோடி செலவிலான சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு மாதமாக காப்பீடு திட்டத்தின்கீழ் சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகள் மறுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள 31 தனியார் மருத்துவமனைகளில், பெரும்பாலான மருத்துவமனைகள் இத்திட்டத்தை முற்றிலும் கைவிட்டதாக தெரியவந்துள்ளது.

இதுகுறித்து அம்மாப்பேட்டை தனியார் மருத்துவனை நிர்வாக இயக்குநர் கூறியது:

விபத்தில் காயமடைந்து வருபவர்களுக்கு காப்பீடு திட்டத்தின்கீழ் தொடக்கத்தில் சிகிச்சை அளித்தோம். அவர்களின் நோய் எதிர்ப்பு சக்திக்கான மருந்து, மாத்திரைகளுக்கே ரூ. 40 ஆயிரம் வரை செலவாகிறது. தலைக்காய சிகிச்சைகளுக்கு ஒரு லட்சம் வரை செலவாகிறது. ஆனால், இன்சூரன்ஸ் நிறுவனம் வெறும் ரூ. 25 ஆயிரம் மட்டுமே ஒதுக்குகின்றன.

இதய அறுவை சிகிச்சைக்கு ரூ. 1.15 லட்சம் வரை செலவாகிறது. ஆனால் ரூ. 75 ஆயிரம் மட்டுமே இன்சூரன்ஸ் நிறுவனம் ஒதுக்குவதால் எங்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. எனவே, காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்க தயங்குகிறோம் என்றார்.

இதேபோல், சேலத்தில் உள்ள எந்த ஒரு பிரபல மருத்துவமனையிலும் காப்பீடு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை செய்யப்படுவதில்லை.

இதுகுறித்து ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவன பொறுப்பாளர் கூறியது:

சேலம் மாவட்டத்தில் உள்ள சில தனியார் மருத்துவமனைகள் காப்பீடு திட்டத்தில் சிகிச்சை அளிக்க நோயாளிகளிடம் பெரிய தொகை வசூலிப்பதாக புகார்கள் வந்ததால் சில மருத்துவமனைகள் காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்க அரசு தடை விதித்துள்ளது. மற்ற மருத்துவமனைகளில் சேலம் மாவட்டத்தில் காப்பீடு திட்டத்தின் கீழ் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றார்.

அப்படியானால் காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கப்படும் மருத்துவமனைகளின் பட்டியலை வெளியிட்ட அரசு, சிகிச்சை அளிக்கக்கூடாது என தடை விதிக்கப்பட்ட மருத்துவமனைகளின் பட்டியலை பொதுமக்கள், நோயாளிகளின் நன்மைக்காக இதுவரை அறிவிக்காதது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com