ஏமாற்றத்துடன் திரும்பிய தே.மு.தி.க. தொண்டர்கள்
சேலம், ஜன. 10: சேலத்தில் நடைபெற்ற தே.மு.தி.க. மாநாட்டில் கூட்டணி பற்றி தெளிவாக அறிவிக்கப்படாததால், தொண்டர்கள் ஏமாற்றத்துடன் ஊர் திரும்பினர். கடந்த 2005 தொடங்கி நடந்த தேர்தல்களில் தே.மு.தி.க., 10 சதவ


சேலம், ஜன. 10: சேலத்தில் நடைபெற்ற தே.மு.தி.க. மாநாட்டில் கூட்டணி பற்றி தெளிவாக அறிவிக்கப்படாததால், தொண்டர்கள் ஏமாற்றத்துடன் ஊர் திரும்பினர்.
கடந்த 2005 தொடங்கி நடந்த தேர்தல்களில் தே.மு.தி.க., 10 சதவீத வாக்குகளை பெற்றது. குறிப்பிடத்தகுந்த கட்சியாக அடையாளம் பெற்றதால் ஏராளமானோர் அக்கட்சியில் சேர்ந்தனர்.
இனி வரும் தேர்தல்களில் பிரதான கட்சி ஒன்றுடன் தே.மு.தி.க. கூட்டணி வைத்தால், சட்டப் பேரவை, மக்களவையில் குறிப்பிடத்தகுந்த பிரதிநிதித்துவத்தை பெறும் என்ற பரவலான கணிப்பை ஏற்படுத்தியது. ஆனால், 2009 மக்களவைத் தேர்தலின்போது கூட்டணி பேச்சு எழுந்தபோது, நீண்ட இழுபறிக்குப் பின்னர் மக்களுடன் மட்டும்தான் கூட்டணி என்று அறிவித்தார் விஜயகாந்த்.
இத் தேர்தலில் கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில் கூட்டணி அமைத்தால்தான், இனி கட்சியை வளர்க்க முடியும் என்ற எண்ணம் தொண்டர்களிடம் வலுவடைந்தது.
இதன் பின்னணியில்தான் 2011 சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து முடிவு செய்யும் அதிகாரத்தை விஜயகாந்துக்கு அளித்தது பொதுக்குழு.
இந் நிலையில், சேலம் தே.மு.தி.க. மாநில மாநாட்டில் கூட்டணி பற்றி முடிவு அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. மாநாட்டு ஏற்பாடுகளைப் பார்வையிட சேலம் வந்த விஜயகாந்த் மனைவி பிரேமலதாவும் கூட்டணி பற்றி விஜயகாந்த் அறிவிப்பார் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதனால், கூட்டணி பற்றிய எதிர்பார்ப்புடன் லட்சக்கணக்கான தொண்டர்கள் சேலத்தில் திரண்டனர். தி.மு.க. ஆட்சியை வீழ்த்த தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் என்று மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் எதிர்பார்ப்பு அதிகரித்தது.
மாநாட்டில் நிறைவாகப் பேசிய விஜயகாந்த், தி.மு.க. அரசு என்ற அரக்கனை வீழ்த்த தமிழக மக்கள் கிருஷ்ண பரமாத்மாக்களாக கிளர்ந்தெழ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். கூட்டணி குறித்து ஏறக்குறைய உறுதியாகிவிட்டதாக கூடியிருந்த பத்திரிக்கையாளர்களும், தொண்டர்களும் நினைத்தனர்.
தொடர்ந்து பேசிய விஜயகாந்த், கூட்டணி வேண்டும் என்று விரும்புவோர் கையை தூக்குங்கள் என்றார். பெரும்பாலான தொண்டர்கள் கையை உயர்த்தினர். ஆனால், விஜயகாந்த்தோ கூட்டணியைப் பற்றி நான் பார்த்துக் கொள்கிறேன். அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்றதும், தொண்டர்கள் ஏமாற்றமடைந்தனர்.
கட்சியை யாரிடமும் நான் அடகு வைக்க மாட்டேன் என்று தொடர்ந்து பேசினார். அவர் பலமுறை பேசிய வசனம்தான் என்பதால் தொண்டர்கள் பலர் ரசிக்கவில்லை.
இது குறித்து விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த தொண்டர் ஒருவரிடம் கேட்டபோது, தி.மு.க. அரசை வீழ்த்த எல்லா கட்சிகளும் ஒன்று சேர வேண்டும் என்று தீர்மானம் போட்டார்கள். ஆனால், கூட்டணி சேர்ந்தவர்களெல்லாம் அடிமைகளாக உள்ளனர். அதேபோல் தே.மு.தி.க.வினரை நான் அடிமைகளாக்க மாட்டேன் என்கிறார். என்ன சொல்ல வருகிறார் என்பதே எங்களுக்குப் புரியவில்லை என்றார்.
ஆக, தமிழ்நாட்டு மக்களுக்கும், தே.மு.தி.க. தொண்டர்களுக்கும் விஜயகாந்த் சொல்ல வரும் கருத்து என்ன என்பதில் தெளிவு இல்லை என்பதை பலரும் ஒப்புக் கொள்கின்றனர். கட்சித் தொண்டர்கள் மட்டுமின்றி, முக்கிய நிர்வாகிகளும் விஜயகாந்த் பேச்சால் கவலையடைந்திருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...