மாற்றுக் கல்விக்காகத் தயாராகிவரும் ’குக்கூ' காட்டுப் பள்ளி!

கல்வி முறையில் மாற்றங்கள் அவசியம் என்ற குரல் அவ்வப்போது எழுந்தும்- வீழ்ந்தும் வரும் சூழலில், மாற்றுக் கல்விக்கான முயற்சிகளும் தமிழ்நாட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்து
Updated on
1 min read

கல்வி முறையில் மாற்றங்கள் அவசியம் என்ற குரல் அவ்வப்போது எழுந்தும்- வீழ்ந்தும் வரும் சூழலில், மாற்றுக் கல்விக்கான முயற்சிகளும் தமிழ்நாட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்து வருகின்றன.
இதன் ஒருபகுதியாகத்தான், ’குக்கூ' காட்டுப் பள்ளியை அமைப்பதற்கான பணிகள் கிருஷ்ணகிரி மாவட்டம், புளியானூர் அருகே ஜவ்வாது மலையடிவாரத்தில் வேகமாக நடைபெற்று வருகின்றன.
மண்ணாலான சுவர்கள், ஓடுகள் மற்றும் மஞ்சப்பில்லால் வேயப்பட்ட கூரைகள், தாங்குத் தூண் இல்லாத ’டூம்' வடிவிலான கூரை, உறிஞ்சு குழி மாதிரியில் அமைக்கப்பட்ட கழிப்பறைகள், பனை மரங்களை நிறுத்தி அமைக்கப்பட்ட தண்ணீர்த் தொட்டி என கட்டுமானத்தில் மாற்றை முன்வைத்திருக்கிறது ’குக்கூ' காட்டுப் பள்ளி வளாகம்.
தேவையற்ற கழிவுகள் என ஒதுக்கப்பட்ட மரத்துண்டுகளை, சிதைந்த கற்தூண்களை, வீசியெறியப்பட்ட பாட்டில்களை, குப்பையெனக் கருதப்பட்ட பழைய ஓடுகளை, உடைந்த பாத்திரங்களைத் தேடித் தேடி எடுத்து வருகிறார்கள். அவற்றைக் கொண்டே அழகான கலை வடிவங்களை உருவாக்குகிறார்கள்.
பெரும் புத்தகங்களின்றி, நவீன வகுப்பறைகளின்றி இயல்பாகப் படிக்கும் வகையிலான கட்டடக் கலை, விவசாயம், மண்ணியல், வானியல், வனவியல், மருத்துவம், கலைப் பயிற்சிகள் என பிரத்யேகப் பாடத் திட்டமும் உருவாக்கப்பட்டு வருகிறது.
இதே இடத்திலேயே கல்வியை முடக்கிவிடாமல், அருகேயுள்ள விவசாய நிலத்திலும், கிழக்குத் தொடர்ச்சி மலைகளிலும் களப்பணியோடு நடத்தவும் திட்டமிட்டிருக்கிறார்கள். இங்கே, இலவசக் கல்வி- தமிழ் வழியில்.
உண்டு உறைவிடப் பள்ளி மாதிரியில் அமைக்கப்படவுள்ள இப் பள்ளிக்கு மத்திய அரசின் மாற்றுக் கல்வித் திட்டத்தின்கீழ் ஏற்பிசைவு பெற விண்ணப்பிக்கவுள்ளனர். காற்றாலை, சூரியஒளி இவற்றைக் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்து கொள்ளவும், கழிவுகளில் இருந்து எரிவாயு தயாரிக்கவும் உள்ளனர்.
ஆடு புலியாட்டம், தாயம், பல்லாங்குழி போன்ற 100 வகையான விளையாட்டுகள் இந்த வளாகத்துக்குள் அமைக்கப்பட்டுள்ளன. ’ஆம்பி தியேட்டர்' என்றழைக்கப்படும் அரங்கையும் தரையில் சுமார் 10 அடிக்குக் கீழே அமைக்கிறார்கள்.
’’2004இல் ஈரோட்டை மையமாகக் கொண்டு தொடங்கப்பட்ட ’குக்கூ குழந்தைகள் வெளி' அமைப்பு, குழந்தைகளுக்கான முகாம்கள் நடத்துதல், நூலகங்கள் அமைத்தல், மாற்றுத் திரைப்படங்கள் திரையீடு போன்ற பணிகளை மேற்கொண்டு வந்தோம்'' என்கிறார் ’குக்கூ' சிவராஜ்.
’’அதன்பிறகுதான் ஒரு மாற்றுப் பள்ளியை உருவாக்கிட கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு புளியானூரில் 6 ஏக்கர் நிலம் வாங்கி, கடந்த 2 ஆண்டுகளாக பணிகளைத் தொடங்கினோம். வரும் 29ஆம் தேதி தொடக்க விழா, பிரபல ஆய்வாளர் அரவிந்த் குப்தா பங்கேற்கிறார்'' என்றார் சிவராஜ்.
நாடு முழுவதும் இதேபோல மாற்றுக் கல்வித் தளத்தில் செயல்படுவோரும் எடுத்துக் கொள்ளும் வகையில்- பாடத் திட்டம் இறுதி செய்யப்பட்டு, இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படவுள்ளது. இப் பணிக்குப் பிறகு அடுத்த கல்வியாண்டில் முழு முறைப்படி பள்ளி செயல்படத் தொடங்கும் என்கிறார்கள்.
மூடப்படாத கதவு, நஞ்சில்லாத உணவு, சுவரில்லாத கல்வி, மருந்தில்லா மருத்துவம் என்ற நம்மாழ்வாரின் கனவுகளை இந்தப் பள்ளியில் அமலாக்க முயற்சிக்கிறோம் என்கிறார்கள் ’குக்கூ' நண்பர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com