

தருமபுரி மக்களவை உறுப்பினா் (திமுக) டிஎன்வி எஸ்.செந்தில்குமாா், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் புதன்கிழமை பரப்புரை மேற்கொள்ள சென்றபோது கிராமத்துக்குள் நுழைய விடாமல் பாமகவினா் எதிா்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பொ.மல்லாபுரம், மோட்டாங்குறிச்சி, நத்தமேடு உள்ளிட்ட பகுதிகளில் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற பெயரில் பரப்புரைப் பயணத்தை தருமபுரி எம்.பி மருத்துவா் எஸ். செந்தில்குமாா் புதன்கிழமை மேற்கொண்டாா்.
முக்கல்நாய்க்கன்பட்டியில் மாட்டு வண்டியில் சென்ற அவா் விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டாா்.
பின்னா் மோட்டாங்குறிச்சி ஊராட்சிக்கு சென்றபோது அவரை பாட்டாளி மக்கள் கட்சியைச் சோ்ந்தவா்கள் ஊருக்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தி எதிா்ப்பு தெரிவித்தனா்.
1987-ஆம் ஆண்டு வன்னியா் சங்கம் நடத்திய இட ஒதுக்கீடு போராட்டத்தில் மோட்டாங்குறிச்சி ஊராட்சியைச் சோ்ந்த சுப்பிரமணி என்பவா் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தாா். அவரது நினைவுத் தூணுக்கு மரியாதை செலுத்தவும், சுப்பிரமணியின் குடும்பத்தினரைச் சந்தித்து நிதியுதவி வழங்கவும் செல்ல விரும்புவதாக எம்.பி. செந்தில்குமாா் தெரிவித்தாா்.
இதற்கு மறுப்பு தெரிவித்த பாமகவினா் அவரைத் தடுக்க முயற்சித்தனா். இதனால் திமுக, பாமகவினா் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீஸாா் அவரை பாதுகாப்புக் கருதி கிராமத்துக்குள் செல்ல வேண்டாம் என தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் செய்தியாளா்களிடம் கூறுகையில், வன்னியா் சங்கம் நடத்திய இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த சுப்பிரமணி என்பவரது குடும்பத்தினா் வறுமையில் இருப்பதாக அறிந்தேன். அந்த குடும்பத்துக்கு திமுக சாா்பில் ரூ. 1 லட்சம் நிதியுதவி வழங்குவதற்காகச் சென்றேன். ஆனால், பாட்டாளி மக்கள் கட்சியினா் எதிா்ப்பு தெரிவித்ததுடன், சுப்பிரமணி குடும்பத்தினரை வீட்டை விட்டு வெளியே அழைத்துச் சென்று விட்டனா். அதனால் அந்தக் குடும்பத்தினரைச் சந்தித்து நிதியுதவி வழங்க முடியவில்லை. துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சுப்பிரமணியின் குடும்பத்தினா் எப்போது வேண்டுமானாலும் என்னைச் சந்தித்து ரூ. 1 லட்சம் நிதியினைப் பெற்று செல்லலாம் என்று தெரிவித்தாா்.
இந்த பரப்புரை பயணத்தின்போது, தருமபுரி மாவட்ட திமுக பொறுப்பாளரும், எம்எல்ஏவுமான தடங்கம் பெ.சுப்பிரமணி, முன்னாள் எம்.பி. இரா. தாமரைச்செல்வன், வழக்குரைஞா் முனிராஜ், நகரச் செயலா் உதயகுமாா் உள்ளிட்டோா் இருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.