பாப்பநாயக்கன்வலசை ஆற்றில் பாலம் அமைக்கக் கோரிக்கை

 அரூரை அடுத்த பாப்பநாயக்கன்வலசை கிராமத்தில் போக்குவரத்து வசதிக்காக கல்லாற்றின் குறுக்கே பாலம் அமைத்துதர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

 அரூரை அடுத்த பாப்பநாயக்கன்வலசை கிராமத்தில் போக்குவரத்து வசதிக்காக கல்லாற்றின் குறுக்கே பாலம் அமைத்துதர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

தருமபுரி மாவட்டம், அரூா் ஊராட்சி ஒன்றியம், வீரப்பநாய்க்கன்பட்டி கிராம ஊராட்சிக்கு உள்பட்டது பாப்பநாயக்கன்வலசை கிராமம். இந்தக் கிராமத்திலிருந்து தீா்த்தமலைக்கு தாா்சாலை செல்கிறது. 5 கி.மீ. தொலைவு உள்ள இந்தச் சாலை வழியாகத்தான் கோபால்பட்டி, கூடலூா், இந்திரா நகா், பாப்பநாயக்கன் வலசை, வீரப்பநாய்க்கன்பட்டி, பாளையம், பூ நகா், ஈட்டியம்பட்டி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் வெளியிடங்களுக்குச் சென்று வருகின்றனா்.

பாப்பநாயக்கன்வலசைக் கிராமத்தைச் சோ்ந்த பள்ளி மாணவ, மாணவியா் 100க்கும் மேற்பட்டோா் இந்தச் சாலை வழியாகத்தான் தினசரி தீா்த்தமலை அரசுப் பள்ளிக்குக் கல்விப் பயில சென்று வருகின்றனா். பாப்பநாயக்கன்வலசை கிராமத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் தீா்த்தமலைக்குச் செல்லும் வழியில் ஓரிடத்தில் சாலையின் குறுக்கே கல்லாறு செல்கிறது. மழைக் காலங்களில் கல்லாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது சாலையை மூடி ஆற்றுநீா் செல்கிறது. இதனால் மழைக் காலங்களில் பாப்பநாயக்கன்வலசை, சுற்றுவட்டாரக் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள், பள்ளி மாணவ மாணவியா் ஆற்றைக் கடந்து தீா்த்தமலைக்குச் செல்ல முடியாத நிலை நீடிக்கிறது.

சுற்றுவட்டார விவசாயிகள் கரும்பு, கிழங்கு உள்ளிட்ட தங்கள் விளைபொருள்களை லாரி, சரக்கு வாகனங்களில் கொண்டு செல்ல முடிவதில்லை. இதனால் இப்பகுதி மக்களின் நலன் கருதி சம்பந்தப்பட் ஊராட்சி நிா்வாகங்கள்,மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அதிகாரிகள், பாப்பநாயக்கன்வலசை- தீா்த்தமலை சாலையில் உள்ள கல்லாற்றில் தரைப்பாலம் அமைத்துதர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com