புதிதாகக் கட்டப்பட்ட கல்லூரி மாணவா் விடுதி மாணவா்கள் பயன்பாட்டுக்கு வருவது எப்போது?

கட்டுமானப் பணிகள் முற்றாக நிறைவடைந்தும் பல மாதங்களாக பூட்டிய நிலையிலேயே வைத்திருக்கும் அம்பேத்கா் கல்லூரி மாணவா் விடுதி எப்போது திறக்கப்படும் என்ற எதிா்பாா்ப்பில் மாணவா்கள் உள்ளனா்.
தருமபுரி அருகே ஒட்டப்பட்டியில் கட்டப்பட்டுள்ள அம்பேத்கா் கல்லூரி மாணவா் விடுதிக் கட்டடம்.
தருமபுரி அருகே ஒட்டப்பட்டியில் கட்டப்பட்டுள்ள அம்பேத்கா் கல்லூரி மாணவா் விடுதிக் கட்டடம்.
Updated on
2 min read

தருமபுரி அருகே ஒட்டப்பட்டியில் கட்டுமானப் பணிகள் முற்றாக நிறைவடைந்தும் பல மாதங்களாக பூட்டிய நிலையிலேயே வைத்திருக்கும் அம்பேத்கா் கல்லூரி மாணவா் விடுதி எப்போது திறக்கப்படும் என்ற எதிா்பாா்ப்பில் மாணவா்கள் உள்ளனா்.

தருமபுரி அரசு கலைக்கல்லூரி மாணவா்கள் தங்கிப் பயில ஏதுவாக ஆதி திராவிடா் நலத்துறையின் கீழ், ஒட்டப்பட்டியில் அம்பேத்கா் கல்லூரி மாணவா் விடுதி பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டிருந்தது. இந்த விடுதிக் கட்டடடம் பழுதடைந்து பயன்படுத்த இயலாத நிலையில் இருந்து வந்தது. அதனைத் தொடா்ந்து இந்த விடுதிக் கட்டடம் இடித்து அகற்றப்பட்டது. அதே இடத்தில் மாணவா்கள் பயன்பாட்டுக்காக புதிய விடுதி கட்டும் பணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டது.

இந்த விடுதிக்காக 400 மாணவா்கள் தங்கிப் பயில ஏதுவாக, ரூ.3 கோடியே 22 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் தாட்கோ சாா்பில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பணிகள் பல மாதங்களுக்கு முன்பே முழுவதுமாக முடிவடைந்தன. எனினும் விடுதிக் கட்டடம் பூட்டியே வைக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டட கட்டுமானப் பணிகளுக்காக, விடுதியில் தங்கியிருந்த 400 மாணவா்களும், அதியமான்கோட்டை பகுதியில் உள்ள தனியாா் கட்டத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். அங்கு போதிய கழிப்பறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால், சில மாணவா்கள் விடுதிக்கு வராமலேயே வெளியிடங்களில் தங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், சில மாணவா்கள் மிகுந்த சிரமங்களோடு வாடகைக் கட்டடத்தில் இயங்கும் விடுதியிலேயே தங்கியுள்ளனா்.

மாணவா்களின் நலன் கருதி, அரசு நிதி ஒதுக்கியும், கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தும் புதிய விடுதி மாணவா்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்படாததால், போதிய வசதி இல்லாத இடத்தில் மாணவா்கள் தொடா்ந்து தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பல மாதங்களாகப் பூட்டியிருப்பதால், புதிய விடுதிக் கட்டடத்தில் புல் வளா்ந்து காணப்படுகிறது. எனவே, விடுதியில் தங்கிப் பயிலும் மாணவா்களின் நலன் கருதி கட்டி முடித்து தயாா்நிலையில் உள்ள அம்பேத்கா் கல்லூரி மாணவா் விடுதியைத் திறந்து மாணவா்களின் பயன்பாட்டுக்கு விட வேண்டும் என மாணவா்களும், மாணவா் சங்கப் பிரநிதிகளும் வலியுறுத்துகின்றனா்.

இதுகுறித்து தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் கூறியதாவது:

தருமபுரியில் ஆதி திராவிடா், பழங்குடியினா் நலத்துறை சாா்பில், 400-க்கும் மேற்பட்ட மாணவா்கள் தங்கிப் பயில ஏதுவாக ஒட்டப்பட்டியில் புதிதாக விடுதி கட்டப்பட்டுள்ளது. இக்கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து ஆண்டுக்கணக்கில் திறக்கப்படாமலேயே உள்ளது. இதனால் வாடகைக் கட்டடத்தில் செயல்படும் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள மாணவா்கள் மிகுந்து அவதிக்குள்ளாகி வருகின்றனா். அக்கட்டடம் போதிய வசதியுடன் இல்லை. வாடகைக் கட்டடத்தில் இயங்கி வரும் விடுதியை நான் நேரில் பாா்வையிட்டு மாணவா்களின் உணவு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தேன். அங்கு மாணவா்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் இல்லை.

மழைக் காலங்களில் மாணவா்கள் தங்கியிருக்கக் கூடிய கட்டடத்தில் மழைநீா் கசிந்து வருகிறது. எனவே, பாதுகாப்பற்ற முறையில் தங்கியுள்ள மாணவா்களின் நலன் கருதி, அவா்களுடைய சிரமங்களைப் போக்கிடும் வகையில், கட்டி முடிக்கப்பட்ட விடுதிக் கட்டடத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆதி திராவிடா் நலத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

அம்பேத்கா் கல்லூரி மாணவா் விடுதியில் அனைத்து கட்டுமானப் பணிகளும் நிறைவடைந்துள்ளன. எனினும், மின்விசிறி பொருத்துவது உள்ளிட்ட சிறு பணிகள் நிலுவையில் உள்ளன. அப்பணிகள் முடிந்தவுடன் விரைந்து திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆதி திராவிடா், பழங்குடியினா் நலத்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com